உ.பி.-ம.பி. போலீஸாரின் எல்லை அதிகார வரம்பு இழுபறியால் விபத்தில் மரணமடைந்தவரின் உடல் 4 மணி நேரத்துக்குப் பிறகு மீட்பு

உத்தர பிரதேச மற்றும் மத்திய பிரதேச போலீஸாரின் எல்லை அதிகார வரம்பு தொடர்பான இழுபறியால் சாலை விபத்தில் மரணமடைந்தவரின் உடல் 4 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டது. போலீஸாரின் இந்த மனிதாபிமானமற்ற செயல் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

27 வயதான ராகுல் அகிர்வாருக்கு அண்மையில்தான் திருமணம் முடிந்தது. குடும்பத்தை காப்பாற்றுவதற்காக டெல்லிக்கு வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிச் சென்றுள்ளார். இவரது கெட்ட நேரம் சாலையை கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ராகுல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

முதலில், அங்கிருந்த பொதுமக்கள் இந்த விபத்து குறித்து மத்திய பிரதேச மாநில ஹர்பல்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த ம.பி. போலீஸார் இந்த விபத்து தங்களது அதிகார வரம்புக்குள் வராது என்றும், உத்த பிரதேச மாநிலத்தின் மஹோபா மாவட்ட மஹோப்காந்த் போலீஸாரை அழைக்கும்படி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர். உ.பி. போலீஸாரை அழைத்தபோது அவர்கள் அலட்சியமாக ம.பி. போலீஸாரிடம் தெரிவிக்குமாறு கூறி அழைப்பை துண்டித்துவிட்டனர்.

இரு மாநில போலீஸாரும் மாறி மாறி இப்படியே கூறியதால், இனி பேசி பிரயோஜனமில்லை என தெரிந்து கொண்ட பொதுமக்கள் சடலத்துக்கு அருகில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தை தொடங்கினர். அவர்களின் தொடர் முயற்சியால், 4 மணி நேரத்துக்குப் பிறகு ம.பி.போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போக்குவரத்து நெரிசலை பொதுமக்களே சரிசெய்து இயல்பு நிலைக்கு கொண்டுவந்தனர்.

இருமாநில போலீஸாரின் இந்த மனிதாபிமானமற்ற அணுகுமுறையை கண்டு பொதுமக்கள் மிகவும் வேதனையடைந்தனர்.

இதுகுறித்து ராகுல் அகிர்வால் உறவினர்கள் கூறுகையில், “ மத்திய பிரதேச பகுதியில்தான் இந்த விபத்து நடந்துள்ளது. ஆனால்,

ம.பி. போலீஸாரை அழைத்தால் எல்லையை காரணம் காட்டி எங்களை திட்டுகின்றனர். மாலை 7 மணிக்கு விபத்து நடந்த நிலையில் போலீஸாரின் அலட்சியத்தால் 11 மணிக்குத்தான் உடல் மீட்கப்பட்டது. இந்த விபத்துக்கு காரணமான வாகனத்தை உடனடியாக போலீஸார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.