மதுரை: தமிழக பாஜகவில் மாவட்ட தலைவர் தேர்தல் முடியாத நிலையில் பாஜக மாநில தலைவராக மீண்டும் அண்ணாமலை நியமிக்கப்பட்டதாக மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக பாஜகவில் அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. மாவட்ட தலைவர் தேர்தல் முடிந்து ஓட்டுப் பெட்டிகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஓரிரு வாரத்தில் மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்படலாம். அதன் பிறகு மாநில தலைவர் தேர்தல் அறிவிக்கப்படும்.
மாநில தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர்கள் தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, சட்டப் பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் மதுரையில் அண்ணாமலை ஆதரவாளர்கள், மாநில பாஜக தலைவராக மீண்டும் அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அதில், பிரேக்கிங் நியூஸ் என்ற தலைப்பில் ஒட்டியுள்ள போஸ்டர்களில், “பாஜக தொண்டர்கள் உற்சாகம் பொதுமக்கள் வரவேற்பு”. மீண்டும் தமிழக பாஜக தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். வழி முழுவதும் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு என வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
மாநில தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியாகாத நிலையில், அண்ணாமலை மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டதாக மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பாஜவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.