இஸ்ரோ தலைவராக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேல காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த வி.நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது இஸ்ரோ தலைவராக இருக்கும் சோம்நாத்துக்கு முன்பு தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் ஐ.எஸ்.ஆர்.ஓ தலைவராக மீண்டும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. விஞ்ஞானி நாராயணனின் தந்தை வன்னிய பெருமாள், தாய் தங்கம்மாள். வன்னியபெருமாள் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். ஏழைகுடும்பத்தைச் சேர்ந்த நாராயணன் கீழ காட்டுவிளை அரசு தொடக்கப் பள்ளியில் படித்தார். ஆதிக்காட்டுவிளை ஊராட்சியில் உள்ள சியோன்புரம் சி.எஸ்.ஐ பள்ளியில் உயர்நிலை படிப்பைத் தொடர்ந்தார். நாகர்கோவில் அருகே உள்ள கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ படித்தார். கோரக்பூர் ஐ.ஐ.டி-யில் கிரயோஜனிக் இன்ஜினீயரிங் பிரிவில் எம்.டெக் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங்கில் பி.ஹெச்.டி முடித்துள்ளார்.
விஞ்ஞானி நாராயணனுக்கு கவிதாராஜ் என்ற மனைவியும் அனுபமா என்ற மகளும், காலேஷ் என்ற மகனும் உள்ளனர். விஞ்ஞானி நாராயணன் தொடக்க காலத்தில் திருவனந்தபுரத்தில் திரவ உந்து விசை எரிவாயு செயல்பாட்டு மையத்தின் இயக்குனராகப் பணியாற்றி வந்தார். 1984-ல் இஸ்ரோவில் பணியில் சேர்ந்த விஞ்ஞானி நாராயணன் ராக்கெட் உந்து விசையில் நிபுணத்துவம் பெற்றவர். சி25 கிரயோஜனிக் திட்டக் குழுவில் இடம் பெற்று வழி நடத்தியிருந்தார்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்த தமிழக விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழாவில் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணனுக்கு பாராட்டு தெரிவித்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டின் உயர் பதவிகளில் ஒன்றான இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணன் வரும் 14-ம் தேதி முறைப்படி பொறுப்பேற்க உள்ளார்.
குமரியைச் சேர்ந்த விஞ்ஞானி நாராயணன் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்ட மகிழ்ச்சியான தகவலை தனது தந்தையின் சகோதரர்களுக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார் நாராயணன். இதையடுத்து அவரது சொந்த ஊரான மேலகாட்டுவிளை பகுதியில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்துள்ளதாக தெரிவித்தனர். சிறு வயது முதல் ஏழ்மையான சூழலில் வாழ்ந்த நாராயணன், அரசுப் பள்ளியில் படித்து கடின உழைப்பின் மூலம் முன்னேறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.