Seeman : `உடல் இச்சை ஏற்பட்டால்…' – பெரியாரை மேற்கோள்காட்டி சீமான் உண்டாக்கிய சர்ச்சை

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்திருந்தார். அப்போது, பெரியாரை மேற்கோள்காட்டி அவர் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாகியிருக்கிறது.

சீமான்

அண்ணா பல்கலைக்கழக விவகாரம், டங்கஸ்டன் சுரங்க பிரச்சனை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு எனப் பலவற்றை பற்றியும் பேசிய சீமானிடம், ‘விஜய் உண்மையாக நேசித்த ஒரே ஆள் நீங்கள்தான். இப்போது ஏன் முரண்பட்டிருக்கிறீர்கள்?’ என ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சீமான், ‘அண்ணன் தம்பி என்கிற பாச நேசமெல்லாம் வேறு. கொள்கைக் கோட்பாட்டு முரண் வேறு. பெரியாரை கொள்கை வழிகாட்டி என்கிறீர்கள், எனில் எந்த இடத்தில் அவர் உங்களுக்கு வழிகாட்டி என கேட்க வேண்டியிருக்கிறது அல்லவா? மொழியிலிருந்துதான் எல்லாமே பிறக்கிறது. இந்த மொழியை பேசுவதால்தான் நான் தமிழன். மொழிதான் எனக்கு கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல் என எல்லாவற்றையும் கொடுக்கிறது. அந்த மொழியையே சனியன், காட்டுமிராண்டி மொழி எனப் பேசியிருக்கிறார். உங்களின் தமிழன்னை உங்களுக்கு என்ன கற்றுக்கொடுத்தார் எனப் பெரியார் கேட்கிறார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியம் எழுதியவருக்கெல்லாம் கற்றுக்கொடுத்தது யார்? மொழியையே இழிவாகப் பேசிய பிறகு என்ன சமூக சீர்திருத்தம் பேசுகிறீர்கள்?

திருக்குறளை மலம் என்கிறீர்கள். கம்பன் உங்களுக்கு எதிரி, திருவள்ளுவர் உங்களுக்கு எதிரி. அப்படிப்பட்டவரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி எனச் சொல்லுங்கள். பெண்ணிய உரிமையிலா? உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்றா தாயோ மகளோ அக்காவோ தங்கச்சியோ அவரோடு உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இரு எனச் சொன்னது பெண்ணிய உரிமையா?

சீமான்

மதுவுக்கு எதிராக தன் தோப்பிலிருந்த 1000 தென்னை மரங்களை வெட்டினார். பகுத்தறிவுவாதிதானே அவர்? என் தோட்டத்தில் கள் இறக்க அனுமதியில்லை எனச் சொல்லியிருக்கலாமே. அதற்காக யாராவது மரத்தை வெட்டுவார்களா? அதுதான் பகுத்தறிவா?’ என பேசியிருந்தார்.

பெண்ணுரிமை சம்பந்தமான சீமானின் இந்தப் பேச்சு சர்ச்சையாகியிருக்கிறது. இந்நிலையில், ‘நாளை காலை 10 மணிக்கு சீமானின் வீட்டுக்குச் செல்கிறேன். பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை அவர் காட்ட வேண்டும்.’ என தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.