சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் வேறு குற்றவாளிகள் இருப்பது தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்பு மற்றும் கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது: குற்றம் நடந்த பிறகு, குற்றவாளியை கைது செய்யாவிட்டாலோ, காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ அரசை நீங்கள் குறை சொல்லலாம். குற்றவாளியை கைது செய்து, ஆதாரங்களை திரட்டிய பிறகும் அரசைக் குறை சொல்வது, அரசியல் ஆதாயத்துக்குத்தானே தவிர உண்மையான அக்கறை இல்லை.
டிச.24-ம் தேதி பிற்பகல் மாணவி அளித்த புகார் அடிப்படையில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மறுநாள் காலையே குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். எப்ஐஆர் கசிந்ததற்கு காரணம் யார்? மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம்(என்ஐசி). காவல்துறையால் உடனே சுட்டிக்காட்டப்பட்டு, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது. பாதுகாப்பு இல்லை, கேமரா இல்லை என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை. கேமரா உதவியுடன் தான் குற்ற வாளி கைது செய்யப்பட்டார்.
உயர் நீதிமன்ற உத்தரவுபடி நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது. விசாரணையில் வேறு யாரேனும் குற்றவாளிகள் இருப்பது தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் சரி, தயவு தாட்சண்யமே இல்லாமல் காவல்துறை கடும்நடவடிக்கை எடுக்கும். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சிறப்பு நீதிமன்றம் மூலம் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும்.
‘யார் அந்த சார்?’ என்பது குறித்து உண்மையாகவே உங்களிடம் ஆதாரம் இருந்தால், சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் சென்று அதை கொடுங்கள். அதை விட்டுவிட்டு, ஒரு மாணவி சம்பந்தப்பட்ட சென்சிட்டிவான வழக்கில் வீண் விளம்பரத்துக்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதான் அன்றைய முதல்வர் “சார்” ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் லட்சணம். அதேபோன்று, இந்த வழக்கு பற்றி பாஜகவினர் பொதுவெளியில் பேசி வருகின்றனர். பாஜக கதைகளை எல்லாம் சொல்லி இந்த அவையின் மாண்பை குறைக்க நான் விரும்பவில்லை. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர் திமுகவில் உறுப்பினராக இல்லை. திமுக ஆதரவாளர் என்பதை மறுக்கவில்லை. அமைச்சர்களுடன், அரசியல்வாதிகளுடன் புகைப்படம் எடுத்திருக்கலாம். அது தவறில்லை. ஆனால், திமுகவினராக இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். உடனடியாக கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறோம்.
அண்ணா நகர் சம்பவம்: 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களது உறவினரான இளஞ்சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டார். காவல் அதிகாரி தவறாக நடத்தியதாகவும், குற்றம் செய்த சதீஷ் என்பவரைக் கைது செய்யவில்லை என்றும் சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியதை தொடர்ந்து, இவ்வழக்கு கோயம்பேடு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு சதீஷ் கைது செய்யப்பட்டார்.
உயர்நீதிமன்றம் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து போலீஸ் மேல்முறையீடு செய்ததில், தமிழக காவல் துறையிலிருந்தே 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இக்குழு அதிமுக வட்ட செயலாளர் சுதாகர், பெண் காவல் ஆய்வாளர் ராஜீ ஆகியோரை கைது செய்துள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.