புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு வகை செய்யும் மசோதா கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது அறிமுகம் செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக 12 மாநிலங்களவை உறுப்பினர்கள், 27 மக்களவை உறுப்பினர்கள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக பாஜக எம்பி பி.வி. சவுத்ரி உள்ளார்.
இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தேர்தல் செலவுகளை குறைக்கும் என்று கூறுவது குறித்து காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உட்பட பல எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். பல மாநில சட்டப்பேரவைகளை முன்கூட்டியே கலைத்து மக்களவை பதவிக்காலத்தை முடக்குவதன் மூலம், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் அரசியலமைப்பு மதிப்புகளை மீறுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
பாஜக எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் இதற்கு பதிலளிக்கையில், ‘‘கடந்த 1957-ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக ஏழு மாநில சட்டப்பேரவைகள் கலைக்கப்பட்டன. அப்போதைய ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசில் அங்கம் வகித்தவர்கள் அரசியலமைப்பை மீறி செயல்பட்டார்களா” என்று தெரிவித்தார்.