இணைய மோசடிகளைத் தடுக்க அரசாங்கமும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மறுபுறம், மோசடி செய்பவர்கள் தொடர்ந்து நூதன முறைகளை பின்பற்றி மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்நிலையில், ஜியோ ஒரு புதிய வகை மோசடி குறித்து கோடிக்கணக்கான பயனர்களை எச்சரித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ தனது கோடிக்கணக்கான பயனர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நிறுவனம் அதன் பயனர்களை ஒரு புதிய வகை இணைய மோசடி குறித்து எச்சரித்துள்ளது. ஜியோ (Reliance Jio) தனது அறிவுறுத்தலில், சைபர் மோசடி ஆசாமிகள், சர்வதேச எண்களில் இருந்து மிஸ்டு கால் கொடுத்து, பணம் பறிப்பது பற்றி குறிப்பிட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளது. அந்த மின்னஞ்சலில், மோசடி செய்பவர்கள் மோசடி செய்வதற்காக சர்வதேச எண்களில் இருந்து மிஸ்ட் கால் அழைப்புகளை மேற்கொள்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச எண்ணிலிருந்து உங்களுக்கு மிஸ்டு கால் வந்தால், தவறுதலாகக் கூட திரும்ப அழைக்க வேண்டாம். மிஸ்ட் கால் அழைப்புகள் சம்பந்தப்பட்ட பிரீமியம் கட்டண சேவை மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வரும் நிலையில், இந்த எண்களுக்கு மீண்டும் அழைக்கும் போது, பிரீமியம் கட்டண சேவை அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு மிக அதிக கட்டணம் செலுத்த வேண்டும். இதன் காரணமாக சில நிமிடங்களிலேயே பெருமளவு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற சர்வதேச எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால்களை மீண்டும் அழைக்க வேண்டாம் என்று நிறுவனம் பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்தகைய எண்களை உடனடியாக தடுக்குமாறு ஜியோ கேட்டுக் கொண்டுள்ளது.
மிஸ் கால் அழைப்பின் போது, ஒரு பயனர் திரும்ப அழைத்தவுடன், அந்த அழைப்பு பிரீமியம் சேவையுடன் இணைக்கப்படும். இந்த பிரீமியம் சேவை நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு கட்டணம் கொண்டது. பல நேரங்களில், இதுபோன்ற அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.100 வரை கூட வசூலிக்கப்படுகிறது. மோசடி செய்பவர்கள் மீண்டும் மீண்டும் அதே எண்களில் இருந்து மிஸ்ட் கால் கொடுத்து, பயனர்களை திரும்ப அழைக்க மறைமுகமாக நிர்பந்திக்கிறார்கள். எனவே, சர்வதேச எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால், அதற்கு பதிலளிக்காமல், உடனடியாக அதைத் பிளாக் செய்யவும். +91 என தொடங்கும் எண்இல்லை என்றால் அந்த அழைப்பு சர்வதேச அழைப்பு என்று அர்த்தம்.