கோவை: ஞானசேகரன் கட்சியின் அனுதாபி என சட்டப்பேரவையில் முதல்வர் கூறியது மக்களை திசை திருப்பும் முயற்சி என அண்ணாமலை தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று விமானம் மூலம் கோவை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்தாது என தெரிவித்த பின்னரும் சட்டப்பேரவையில் அதற்கான தீர்மானம் நிறைவேற்ற அவசியம் இல்லை.
அண்ணா பல்கலை வளாக குற்றச் சம்பவம் தொடர்பாக திமுக-வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஞானசேகரன் திமுகவில் இல்லை என கூறினர். சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், ஞானசேகரன் கட்சியின் அனுதாபி எனக் கூறி தப்பிக்க முயற்சி செய்கிறார். மக்களை திசை திருப்புவதற்காக இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தியுள்ளார். தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் காவல் ஆய்வாளர் மீது எந்த தவறும் இல்லை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது. ஆனால் சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறை அதிகாரியை கைது செய்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும், அதுவே தீர்வு. பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால் அது மக்களுக்கு அருவருப்பை தரும். அதே நேரத்தில் சீமான் அவர்களிடம் விசாரணைக்காக காவல்துறையினர் வந்தால் பெரியார் பேசியதற்கான ஆவணங்களை வழங்கவும் தயாராக உள்ளேன்.
கோவையில் சாலையோர உணவகத்தில் மாட்டு இறைச்சி விற்பனை தொடர்பாக பாஜக கட்சியை சேர்ந்தவர் பேசிய முழு வீடியோ வெளியிடாமல் மாட்டு இறைச்சி குறித்து அவர் பேசிய ஒரு நிமிட வீடியோ மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. பாஜக சார்பில் நடவடிக்கை எடுக்கக் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவில் அருகே மாட்டிறைச்சி உள்பட அசைவ உணவுகள் விற்பனை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதுவே அந்த பாஜக தொண்டரின் நிலைப்பாடாக இருந்தது.
யுஜிசி விவகாரத்தைப் பொறுத்தவரை பிப்ரவரி 5-ம் தேதி வரை கருத்துக்களை அனுப்ப மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.