ரூ.25 லட்சத்துக்கு இலவச மருத்துவ காப்பீடு: டெல்லியில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி

டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் ரூ.25 லட்சத்துக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மூன்று கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதுடன் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் தகுதி உடைய அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படும் என இரு தினங்களுக்கு முன்பு அக்கட்சி அறிவித்தது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் நேற்று கூறியதாவது: ராஜஸ்தானில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இதுபோல டெல்லி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ஜீவன் ரக்சா யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குடிநீரும் மாசடைந்து வருகிறது. இதனால் பல்வேறு சுகாதார கேடுகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், டெல்லி குடிமக்களின் சுகாதார தேவையை பூர்த்தி செய்யும் மகத்தான திட்டமாக இது இருக்கும். அனைவருக்கும் சுகாதார வசதியை உறுதி செய்ய வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்பதை இது பிரதிபலிக்கிறது. டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2013-ல் நடந்த பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 24.5% வாக்குகளை பெற்றது. இது 2020-ல் நடந்த தேர்தலில் 4.3% ஆக சரிந்தது. இந்நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க சிறுபான்மையினர், தலித், பெண்கள் வாக்குகளைக் கவர பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.