புதுடெல்லி: பிரிட்டன் பெண்களுக்கு அங்குள்ள பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்கள் கும்பலால்தான் அதிக அளவில் பாலியல் தொல்லை அளித்து வருவதாக மாநிலங்களவை எம்.பியான பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ பல்வேறு வடக்கு ஆங்கில நகரங்களில் வசித்து வரும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த ஆண்களால்தான் பிரிட்டன் பெண்களுக்கு அதிகளவில் பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, கும்பல்களை சீர்படுத்துவதற்கான பழியை ஆசியாவின் மீது சுமத்த முடியாது. ஆனால், முரட்டு நாடான பாகிஸ்தான் மீது தான் இதற்கான பழியை சுமத்த வேணடும்” என்று தெரிவித்திருந்தார்.
பிரியங்கா சதுர்வேதியின் இந்த கருத்துக்கு ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “ஆமாம். உண்மைதான்” என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஆண்களால் பிரிட்டன் பெண்கள் பரவலாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த தேசிய விசாரணை குழுவை அமைக்க கோரி எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய நிலையில் பிரியங்கா சதுர்வேதி இந்த கருத்தை தெரிவித்திருந்தார். தற்போது அவரின் இந்த கருத்துக்கு எலான் மஸ்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.