போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மத்திய சிறையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் வந்தது எரப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மத்திய சிறை உள்ளது. 151 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இதில் 2,600 பேர் தங்க முடியும். ஆனால், 3,600 பேர் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மிகவும் பாதுகாப்பு மிகுந்த இந்த சிறையின் பி-பிளாக் அருகே ஒரு ட்ரோன் இருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் பாங்க்ரே நேற்று கூறும்போது, “சிறை வளாகத்தில் உள்ள பி பிளாக் அருகே சுமார் 40 கிராம் எடையுள்ள ட்ரோன் இருப்பதை வீரர் ஒருவர் பார்த்துள்ளார். ஆனால், அந்த ட்ரோன் பறந்து வந்ததை யாரும் பார்க்கவில்லை. சிறை வளாகத்துக்கு அருகில் உள்ள குடியிருப்பில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த ட்ரோன் இங்கு வந்து விழுந்திருக்க வாய்ப்பு உள்ளது. அந்த ட்ரோன் காந்திநகர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது சீனாவில் தயாரிக்கப்பட்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார்.