வண்டலூர்: வி.ஐ.டி பல்கலைக்கழகம் சென்னை வளாகம் சார்பில் சர்வதேச சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை வெளிநாட்டு விருந்தினர்கள் கண்டு ரசித்தனர்.
வி.ஐ.டி பல்கலைக்கழகம் சென்னை வளாகம் சார்பில் சர்வதேச சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. வி.ஐ.டி சென்னை மாணவர்களிடையே கடந்த ஜன. 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை கபடி, கவிதை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் விஐடி சென்னை வளாகத்தில் நேற்று சர்வதேச சமத்துவ பொங்கல் விழாவை வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான முனைவர் கோ.விசுவநாதன், வி.ஐ.டியின் துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ஐடி கல்வி நிறுவனத்தின் தலைவர் பிரபு டேவிட் உட்பட 30 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பரிவட்டம் கட்டி கரும்பு வழங்கி கவுரவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. அப்போது அனைவரும் ‘பொங்கலோ பொங்கலோ’ என்று மகிழ்ச்சி பொங்க கோஷங்களை எழுப்பினர்.
நாட்டுப்புற கலைஞர்களால் தேவராட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்ட நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டு காளை மாடு காட்சிப்படுத்தப்பட்டது. இவற்றை வெளிநாட்டு விருந்தினர்கள் கண்டு ரசித்தனர். பாரம்பரிய முறையில் சர்வதேச பொங்கல் விழா கொண்டாடியது வெளிநாட்டு விருந்தினர்களை வெகுவாக கவர்ந்தது.
இதைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா தமிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட பிண்ணனி பாடகர் வேல்முருகன் குழுவினர் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். நிகழ்ச்சியில், வி.ஐ.டியின் துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம், இணை துணை வேந்தர் தியாகராஜன், கூடுதல் பதிவாளர் முனைவர் பி.கே.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.