பிரயாக்ராஜ்: “சனாதனத்தைப் பற்றி குறுகிய பார்வை உடையவர்கள், அதில் சாதி அடிப்படையில் பிரிவினை இருக்கிறது என்று கூறுபவர்கள் மகா கும்பமேளாவில் அனைத்து மக்களும் புனித நீராடும் சங்கமத்தை காண வரவேண்டும்.” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மகாகும்பமேளாவுக்கு மத்தியில், அகில இந்திய வானொலியின், ஆகாசவாணியின் ஒரு பகுதியாக கும்பவாகினி என்ற வானொலி சேனலை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்வில் பேசிய ஆதித்யநாத், “மகா கும்பமேளா என்பது வெறும் சாதாரண நிகழ்வு இல்லை. அது சனாதனத்தின் பெருமையை, மகா கூடுகையை பிரதிபலிக்கிறது.
சனாதனத்தின் புனிதத்தை காண விரும்புகிறவர்கள் மகா கும்பமேளாவுக்கு வர வேண்டும். சனாதனம் பற்றிய குறுகிய பார்வை கொண்டவர்கள், அங்கு பாகுபாடு கடைபிடிக்கப்படுகிறது என்று கூறுவபவர்கள் கும்பமேளாவுக்கு வந்து அங்கு சாதி அடிப்படையில் பிரிவினை கடைபிடிக்கப்படவில்லை என்பதை பார்க்க வேண்டும். இங்கு தீண்டாமை இல்லை, இங்கு பாலின அடிப்படையில் பாகுபாடு இல்லை. சங்கமத்தில் புனித நீராட அனைவரும் ஒன்றிணைகிறார்கள்.
சாமானிய மக்களைச் சென்றடையவும், நாட்டுப்புற கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அவர்களுக்கு கொண்டு செல்ல நமக்கு இருக்கும் ஒரே வழி ஆகாசவாணியே. எனது சிறுவயதில் ஆகாசவாணியில் ஒலிபரப்பப்பட்ட ராம்சரித்திரமனாஸ் கேட்டது நினைவு இருக்கிறது. காலப்போக்கில், விஷயங்கள் மாறின மக்கள் காட்சி ஊடகங்களுக்கு மாறினர். என்றாலும், இந்த சவால்களுக்கு மத்தியில், குறிப்பாக தொடர்பு வெளிக்கு அப்பால் இருக்கும் பகுதிகளிலும் பிரச்சார் பாரதி நிலைத்து நிற்க முடிந்தது.” என்று தெரிவித்தார்.
கும்பவாகினி வானொலி சேனலின் தொடக்க நிகழ்வில், உத்தரப் பிரதேச துணை முதல்வர் பராஜேஷ் பதாக் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மகா கும்பமேளாவினை முன்னிட்டு பிரச்சார் பாரதியால் கும்பவாகினி தொடங்கப்பட்டது.
முன்னதாக, வரவிருக்கும் கும்பமேளா நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பிரயக்ராஜ் நகருக்கு வருகை தந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் அங்கு கும்பமேளா 2025-க்குகான ஊடக மையத்தைத் திறந்து வைத்தார்.
12 ஆண்டுகளுக்கு பின்னர் மகாகும்பமேளா கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வில் 45 கோடி பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பமேளாவின் போது, பக்தர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் முக்கூட்டுச் சங்கமத்தில் நீராட ஒன்று கூடுகின்றனர். மகாகும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி நிறைவடைகிறது.
நிகழ்வின் முக்கிய நீராடல் சடங்கு ஜன.14 (மகாசங்கராந்தி), ஜன.29 (மவுனி அம்மாவசை) மற்றும் பிப்.3 (பசந்த் பஞ்சமி) ஆகிய நாட்களில் நடக்கிறது.