தற்கால தொழில்நுட்ப யுகத்தில், செயற்கை நுண்ணறிவின் வருகை (AI – Artificial intelligence) பல்வேறு தளங்களில் மனிதர்களின் வேலையை நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டு அல்லது எளிமையாக்கிக்கொண்டு வருகிறது. கட்டுரை எழுதுதல், ஆவணங்களைத் தயாரித்தல், புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடிட்டிங் எனப் பல்வேறு வகைகளில் AI-ஐ மக்கள் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அந்த வரிசையில், ஒருநபர் தான் தூங்கும் நேரத்தில் 1,000 வேலைகளுக்கு AI மூலம் தானாக விண்ணப்பிக்கச் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
ரெட்டிட் (Reddit) தளத்தில் தனது அனுபவத்தைப் பகிர்ந்த அந்த நபர், “AI bot ஒன்றை நான் உருவாக்கினேன். இதுவே, வேலை விவரங்களை ஆராய்ந்து, அதற்கேற்றவாறு ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி CV-க்களை உருவாக்கி, வேலைக்கு எடுப்பவர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது. தானாகவே வேலைகளுக்கு விண்ணப்பிக்கிறது. இவையனைத்தையும் நான் தூங்கும்போது அது செய்கிறது. இதன் மூலம், ஒரே மாதத்தில் 50 நேர்காணல்களைப் பெற எனக்கு இது உதவியது.
ஒவ்வொரு வேலைக்கேற்றவாறு உருவாக்கப்பட்ட CV-க்கள் இதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தகைய முறை நம்ப முடியாத அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு வேலை விவரத்துக்கும் ஏற்றவாறு CV-க்கள் உருவாக்குவதன் மூலம், AI மற்றும் வேலைக்கு ஆள் எடுப்பவர்களால் கவனிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கிறது. இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்க்கும்போது, வேலை உலகில் இது ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அதேசமயம், AI மூலம் தானாக வேலைக்கு விண்ணப்பிப்பது பற்றிய கேள்வியும் எழுகிறது.
அப்போது, வேலைக்கான தேர்வு செயல்முறையை மேம்படுத்த முற்படும்போது, பணிச்சூழலில் அடிக்கடி மாற்றத்தை ஏற்படுத்தும்போது மனித வளத்தை இழக்க நேரிடும். எனவே, செயற்கை நுண்ணறிவின் செயல்திறன் மற்றும் மனித தொடர்புகளுக்கிடையே ஒரு நுட்பமான சமநிலையை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான், வேலையின் எதிர்காலத்தை உருவாக்க முடியும். அது வெறும் உற்பத்தியைச் சார்ந்து மட்டுமல்லாமல், அனைவருக்கும் நிறைவானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…