டெல்லி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு

புதுடெல்லி,

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் மக்களின் பங்கேற்பை அதிகரிப்பதை மத்திய அரசு நோக்கமாக கொண்டு உள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு முக்கிய விழாக்களுக்கு சாமானிய மக்களும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார்கள். இதன்படி டெல்லி கடமைப்பாதையில் வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கும் பொதுமக்களில் பல தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் 10 ஆயிரம் பேர் அழைப்பை பெறுகிறார்கள்.

கிராமத்தை கவனிக்கும் முக்கிய நபர்கள், பேரிடர் நிவாரண பணியாளர்கள், சிறந்த கிராமங்களின் முக்கியஸ்தர்கள், வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாவலர்கள், கைவினைஞர்கள், கைத்தறி கைவினைஞர்கள், பல்வேறு திட்டங்களின் சாதனையாளர்கள், அங்கீகாரம் பெற்ற சமூகநல ஆர்வலர்கள், ‘மன்கி பாத்’ பங்கேற்பாளர்கள், பாரா ஒலிம்பிக் வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட 31 பிரிவுகளில் பொதுமக்கள் அழைக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்பது மட்டும் அல்லாமல் தேசிய போர் நினைவிடம், பிரதமர் சங்கராலயா போன்ற இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் பிற நாடுகளின் தலைவர்களும் முக்கிய விருந்தினராக பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.