ஜெயச்சந்திரன்: `அந்தப் பாட்டு தந்த புகழ் இருக்கே..!’ – `வைதேகி காத்திருந்தாள்’ பிரமிளா குடும்பம்

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள சினிமாக்களில் சுமார் 16,000 பாடல்களைப் பாடி பல விருதுகளைப் பெற்ற பாடகர் ஜெயச்சந்திரன் கேரளாவில் நேற்று இரவு காலமானார். அவரின் உடல் நாளை அடக்கம் செய்யப்படவிருக்கிறது.

தமிழில் ஜெயச்சந்திரன் பாடிய பல பாடல்கள் எவர்கிரீன் ரகம். ‘ராசாத்தி உன்ன’, ‘தாலாட்டுதே வானம்’, கத்தாழங் காட்டு வழி’, ‘சொல்லாமலே’ என சில பட பாடல்களை உதாரணம் சொல்லலாம். விஜயகாந்த் முதல் விஜய் வரை பல முன்னணி நடிகர்கலின் படங்களில் பாடியிருக்கிறார். அதேபோல எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா தொடங்கி ஏ.ஆர். ரஹ்மான் வரை முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது இசையிலும் பாடியிருக்கிறார்.

‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தின் ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ பாடலும் இவர் பாடியதே. இந்தப் பாடல் காட்சியில் விஜயகாந்தின் முறைப்பெண் வைதேகியாக நடித்தவரும் நடிகை மேக்னா ராஜின் அம்மாவுமான பிரமிளா ஜோஷாய் தற்போது கணவர் மகளுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

மேக்னா ராஜின் தந்தை சுந்தரும் இயக்குனர் ருத்ரைய்யாவின் ‘கிராமத்து அத்தியாயம்’ படம் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தவர். இவருக்குமே ஜெயச்சந்திரன் பாடியிருக்கும் சூழலில் இந்த தம்பதியிடம் பேசினோம்.

பாடகர் ஜெயச்சந்திரன்

 ‘’கிராமத்து அத்தியாயம்’ 80ல் வெளியாச்சு. அந்தப்பட வாய்ப்பு எனக்கு கமல்ஹாசன் சிபாரிசால் கிடைச்சது. படத்துல நானும் சுவர்ணலதாவும் நடிச்சிருந்த ‘ஊதக்காத்து வீசயில’ பாட்டு ஜெயச்சந்திரன் பாடினார். அந்தப் பாட்டும் இப்ப கேட்டாலும் இனிக்கும். ஆனா அந்தச் சமயத்துல எனக்கு ஜெயச்சந்திரன் அவ்வளவு பரிச்சயம் கிடையாது. நான் நடிச்ச படத்துல பாட்டு பாடியிருக்கார்ங்கிற அளவுல தெரியும்.

ஆனா அந்தப் பாட்டை எனக்கு ரொம்பவே பிடிக்கும். ‘பாட்டு நல்லாருக்கு’னு சொல்லி அவர்ட்ட பேசினதோட சரி, அதுக்குப் பிறகு அவர்கிட்ட தொடர்பு இல்லை.

ஆனா அதுக்குப் பிறகு நாலு வருஷம் இருக்கும், என் மனைவி பிரமிளா நடிச்சு ’வைதேகி காத்திருந்தாள் வெளியாச்சு.

அதுல ‘ராசாத்தி உன்ன’ பாட்டைப் பாடியிருந்தார். அந்தப் பாட்டு பிரமிளாவுக்குத் தந்த புகழை சும்மா சொல்லக் கூடாது. தமிழ்ல அந்தப் படத்துக்குப் பிறகு பெரிசா அவங்க நடிக்கலைன்னாலும் அந்த ஒரு பாட்டை வச்சு இன்னைக்கும் தமிழ்நாட்டுல நாங்க எங்க வந்து இறங்குனாலும் அடையாளம் கண்டு பிடிச்சிடுறாங்க.

தமிழ்நாட்டுக்கு நாங்க வந்தப்ப அப்படி சந்திச்ச நிறைய அனுபவங்கள் இருக்கு. கிராமத்து அத்தியாயம், வைதேகி காத்திருந்தாள் ரெண்டு படமுமே இளையராஜா இசை.

நாங்க நடிச்ச இந்த இரண்டு படங்களுமே ரிலீசாகி 45 வருஷமாச்சு. சொன்னா நம்ப மாட்டீங்க, இந்த ரெண்டு பாடல்களுமே எங்க வீட்டு ப்ளே லிஸ்ட்ல இப்பவும் இருக்கு, அதைவிட இந்த ரெண்டு பாட்டும் ஒலிக்காத நாளே எங்க வீட்டுல இருக்காது’. ஊரே தூங்குகிற ராத்திரி நேரங்கள்ல இந்தப் பாட்டைப் போட்டுவிட்டா அப்படியொரு அனுபவம் கிடைக்கும் ’ என்கிறார் சுந்தர்.

வைதேகி காத்திருந்தாள்

பிரமிளாவோ, நானுமே அந்தச் சமயத்துல அவர்ட்டப் பேசினதுதான். ’ராசாத்தி உன்ன’க்குப் பிறகு கன்னடத்துல அவர் பாடிய பாடல்களைத் தேடத் தொடங்கினோம்; சமீபத்துல உடல்நிலை சரியில்லாம இருக்கார்னு கேள்விப்பட்டோம். குணமாகிடணும்னு வேண்டிகிட்டோம். ஆனா காலம் அவரைக் கூட்டிகிடுச்சு. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்’ என முடித்துக் கொண்டார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.