பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி,

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80) உடல்நலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் நேற்று காலமானார். தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியுள்ளார். இவர் இந்திய தேசிய திரைப்பட விருதை ஒருமுறையும், தமிழக அரசின் மாநில திரைப்பட விருதை நான்கு முறையும், கேரள மாநில திரைப்பட விருதை நான்கு முறையும் பெற்றுள்ளார். 1997ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். தமிழில் புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், சம்சாரம் அது மின்சாரம், அம்மன் கோவில் கிழக்காலே, கிழக்குச் சீமையிலே, பூவே உனக்காக, சுந்தரா டிராவல்ஸ், கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

ஜெயச்சந்திரன் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பழம்பெரும் குரலால் ஆசீர்வதிக்கப்பட்டவர். பல்வேறு மொழிகளில் அவரது ஆத்மார்த்தமான பாடல்கள் வரும் தலைமுறையினரின் இதயங்களை தொடும். அவரது மறைவால் வேதனை அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் உள்ளன என பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.