புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவுக்கு முஸ்லிம்கள் வரலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதிலை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இந்த முறை ஜனவரி 13-ல் மகா கும்பமேளா துவங்குகிறது. இந்த மகா கும்பமேளாவில் முஸ்லிம்கள் எவரும் கடைகளை நடத்தக் கூடாது என துறவிகளின் சபைகளான அகாடாக்கள் வலியுறுத்தின. இந்தச் சூழலில், மகா கும்பமேளாவில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்ற பேச்சுக்களும் எழுந்தன. இந்தப் பின்னணியில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது கும்பமேளா திடலில் முஸ்லிம்களின் அனுமதி குறித்த கேள்வி முதல்வரிடம் எழுப்பப்பட்டது. இதற்கு விரிவான பதிலை முதல்வர் யோகி அளித்துள்ளார்.
துறவியும், கோரக்நாத் மடத்தின் தலைவருமான முதல்வர் யோகி கூறும்போது, ‘தம்மை ஒரு இந்தியன் என எண்ணுபவர்களும், சனாதனம் மீது மரியாதை கொண்டவர்களும் கும்பமேளாவுக்கு வரலாம். சிலரது மூதாதையர்கள் தம் கடவுளை வணங்க, கட்டாயத்தின் பேரில் தமது மதமாக இஸ்லாத்தை ஏற்றனர். எனினும், அவர்களும் இந்தியக் கலாச்சாரத்தின் மீது பெருமை கொண்டவர்களாக உள்ளனர்.
மேலும், அவர்கள் தங்கள் கோத்திரத்தை இந்தியாவின் முனிவர்களின் பெயருடன் தொடர்புபடுத்துகிறார்கள். இதேநிலையில் அவர்கள் இந்திய பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்கின்றனர். இதுபோன்றவர்கள் தங்கள் கலாச்சாரத்தின்படி கும்பமேளாவின் சங்கமத்தில் புனித நீராடல் செய்ய விரும்பி வந்தால் பிரச்சினை இல்லை. இதற்காக வருபவர்கள் வரவேற்கப்படுவார்கள்.
ஆனால், சிலர் இந்த கும்பமேளா நிலம் தம்முடையது போன்ற சிந்தனைகளில் வந்தால் அவர்களது ஒடுக்குமுறைகளை எடுத்து புதிய வர்ணம் பூசுவது அவசியமாகிறது.’ எனத் தெரிவித்தார்.
முன்னதாக சில தினங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் பரேலி மவுலானாவான முப்தி ஷ்காபுத்தீன் ரிஜ்வி கூறியக் கருத்து பெரும் சர்ச்சையானது. அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவரான இவர், பிரயாக்ராஜில் கும்பமேளா நடைபெறும் இடம் மாநிலத்தின் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது எனக் குறிப்பிட்டிருந்தார்.
மவுலானாவின் இந்தக் கருத்திற்கு பல முஸ்லிம் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையேதான் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தனது பதிலில் தெரிவித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
மவுலானவின் கருத்து குறித்து முதல்வர் யோகி கூறுகையில், ‘கும்பமேளா நிலத்தை தங்களுடையது எனத் தவறாகக் கூறுவது வக்ஃபு வாரியமா அல்லது நில மாஃபியாவா? இந்த உண்மையை கண்டறிய நாம் 1363 ஆம் ஆண்டு முதலான ஆவணங்களைப் பார்க்க வேண்டி உள்ளது.
அதில் இந்த நிலம் யாருடையதாக இருந்தது என்பதை கண்டறிந்து ஆராய்ந்தபின் அவருக்கு பதிலளிக்கிறேன். ’எனக் கூறியிருந்தார். ஜனவரி 13ம் தேதி துவங்கும் மகா கும்பமேளாவுக்கு நாற்பது கோடிக்கும் அதிகமானோர் வருகை தருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.