பாடகர் ஜெயச்சந்திரன். சுமார் 60 ஆண்டுகளாக பாடகராக பயணம்; கிட்டத்தட்ட 16,000 பாடல்கள் வரை பாடியுள்ளார். தன்னுடைய குரல் வளத்துக்காகவும், பாடல் வரிகளுக்கான உணர்வுகளை அப்படியே தன்னுடைய குரலில் பிரதிபலித்ததற்காகவும் தேசிய விருது, சிறந்த பின்னணிப் பாடகருக்கான தமிழ்நாடு அரசின் விருது, கேரள மாநில விருது எனக் கொண்டாடப்பட்டவர் இன்று நம்முடன் இல்லை. அவர் பற்றி தன்னுடைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார் பின்னணிப் பாடகி சுனந்தா.
”அவர் என்னோட தாய் மாமா. எங்கம்மாவோட தம்பி அவர். அம்மாவைவிட மாமா ரொம்ப இளையவர்ங்கிறதால, சின்னப்பிள்ளைல இருந்து நான் அவரை சேட்டன்னு கூப்பிட்டு பழகிட்டேன். எங்களோட குடும்பத்தை பாளையம் ஃபேமிலின்னு கேரளாவுல சொல்வாங்க. கேரளாவுல இருக்கிற ராஜ குடும்பங்கள்ல எங்களோடதும் ஒண்ணு. ‘பாளையம்’ல வர்ற ‘P’ தான் மாமா ஜெயச்சந்திரனோட இனிஷியல். மாமா பாடல் வரிகளுக்குத் தேவையான எக்ஸ்பிரஷன், எமோஷன்ஸ் சேர்த்து ரொம்ப அழகாகப் பாடுவார். அதனாலதான் கேரளாவுல அவரை ‘பாவ காயகன்’ (Bhava Gayakan) னு கொண்டாடுவாங்க.
அகில இந்திய வானொலியில, மாமா தான் என்னை ஆடிஷனுக்கு அழைச்சிட்டுப் போனார். பிறந்தது கேரளான்னாலும் என்னோட தமிழ் உச்சரிப்பு சரியா வர்றதுக்கு காரணம் ஜெயச்சந்திரன் மாமா தான். சுசீலாம்மா, ஜானகியம்மாவோட பாடல்களை பாட வெச்சு, பாடல் வரிகளுக்கு ஏத்த உணர்வுகளை என் குரல்ல வரவழைச்சது மாமாதான். மாமாவோட டூயட் பாடுறப்போ, என்னோட வரிகளை எப்படி எக்ஸ்பிரஷனோட பாடணும்னும் சொல்லித்தருவார். அவருக்கு சுசீலாம்மான்னா உயிர். அவரோட பாடல் வரிகள் மட்டுமில்லாம, மத்தவங்க பாடின பாடல் வரிகளும் மாமாவுக்கு மனப்பாடமா தெரியும். அவர்தான் என்னோட குரு என்று” நெகிழ்ந்தவர், ரேவதி நடித்த ‘புதுமைப்பெண்’ படத்தில் வருகிற ‘காதல் மயக்கம்’ பாடல் ரெக்கார்டின்போது நடந்த ஒரு சம்பவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
”காதல் மயக்கம் பாடல் பாடுறதுக்காக நான் ஸ்டூடியோவுக்கு வந்திருந்தேன். தமிழ்ல அதுதான் என்னோட முதல் பாட்டு. அதுவும் மாமாகூட சேர்ந்து பாடுறதுக்காக வந்திருந்தேன். மாமாவுக்கு அது செம சர்ப்பரைஸ். ஸ்டுடியோவுல என்னைப் பார்த்தவர் ‘வாய்ஸ் டெஸ்ட் செய்ய வந்திருக்கியா’ன்னு கேட்டார். இல்ல, உங்ககூட டூயட் பாட வந்திருக்கேன்னு சொன்னேன். அந்த நேரத்துல மாமாவோட முகத்துல அவ்ளோ சந்தோஷம், பெருமிதம்.
தன்னோட கடைசி நாள்கள்லகூட மாமா ஒரு பாட்டுப் பாடியிருந்தார். மைகாட், அவரோட குரல் வளம் மாறவே இல்ல. போன வருஷம் ஓணம் நேரத்துல மாமாவோட வொய்ஃப் கிட்ட பேசியிருந்தேன். ‘உடல்நிலை சரியில்லைன்னாலும் பாசிட்டிவா தான் இருக்கார். கொஞ்சம் சோர்வா தெரியுறார்’னு சொல்லியிருந்தாங்க. மாமாவுக்கு மனசுக்குள்ள கடவுள் நம்பிக்கை அதிகம். அதனாலேயே தன்னோட கடைசி நாள்கள்லகூட மரணத்தைப்பத்தின பயம் இல்லாம இருந்தார். மாமாவோட பாடல்களைக் கேட்டுதான் மனசை ஆறுதல்படுத்திக்கிட்டிருக்கேன்” என்கிறார் சுனந்தா உருக்கமாக.
ஜெயச்சந்திரனின் அத்தனை ரசிகர்களுக்கும் அவருடைய குரல்தானே இனி ஆறுதல். இளைப்பாறுங்கள் பாவ காயகன் சார்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…