வெனிசுலா அதிபராக இன்று பதவியேற்கிறார் மதுரோ: அதிகாரத்தை கைப்பற்ற மல்லுக்கட்டும் எதிர்க்கட்சி

கராகஸ்:

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ‘நான்தான் வெற்றி பெற்றேன்’ என எதிர்க்கட்சி வேட்பாளர் எட்மண்டோ கான்சலஸ் திட்டவட்டமாக கூறினார்.

ஆளுங்கட்சி விசுவாசிகளின் ஆதிக்கம் நிறைந்த தேசிய தேர்தல் கவுன்சில், வாக்குப்பதிவு முடிந்த சில மணிநேரங்களுக்கு பிறகு மதுரோவை வெற்றியாளராக அறிவித்தது. இருப்பினும், முந்தைய தேர்தல்களைப் போலல்லாமல், தேர்தல் அதிகாரிகள் விரிவான தேர்தல் முடிவுகளை வழங்கவில்லை. வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டதால் தகவல்களை வெளியிட முடியவில்லை என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனை எதிர்க்கட்சி ஏற்கவில்லை.

தேர்தலுக்குப் பின்னர், மதுரோவின் வெற்றியை ஏற்க மறுத்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. நூற்றுக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர். சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஆஸ்திரேலியா முதல் ஸ்பெயின் வரையிலும், பிரிட்டன், கனடா, கொலம்பியா, மெக்சிகோ மற்றும் அர்ஜென்டினாவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பல லத்தீன் அமெரிக்க நாடுகள் தேர்தல் முடிவை அங்கீகரிக்க மறுத்தன.

நாட்டின் அமைதியற்ற சூழல் நிலவியதால், கிளர்ச்சியை தூண்டியதாக எதிர்க்கட்சி வேட்பாளர் எட்மண்டோ கான்சலசை கைது செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் நாட்டை விட்டு தப்பிச்சென்ற கான்சலஸ், ஸ்பெயினில் அரசியல் தஞ்சம் புகுந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், தேர்தல் ஆணையத்தால் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட நிகோலஸ் மதுரோ இன்று பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவிற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது ஒருபுறமிருக்க, எதிர்க்கட்சி வேட்பாளர் எட்மண்டோ கான்சலசும், நாடு திரும்பி பதவியேற்க தீர்மானித்துள்ளார். அவர் நாடு திரும்பினால் அவரை கைது செய்ய அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

தலைநகர் கராகசில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிக்கோலஸ் மதுரோவை அதிகாரத்தில் நீடிப்பதை தடுக்கும் கடைசி முயற்சியாக இப்போராட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். சிறிது நேரம் கழித்து அவர் விடுவிக்கப்பட்டார்.

அதிபர் பதவியை கைப்பற்றுவதற்காக இரு தலைவர்களிடையே நடக்கும் அதிகாரப் போட்டியால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் நாடு திரும்பி கைது செய்யப்பட்டால், போராட்டம் மற்றும் வன்முறை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

அரசியல் போட்டியாளர்களை அடக்குவதாக மதுரோவின் அரசாங்கம் நீண்ட காலமாக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.