அநீதிக்கு எதிராக தனக்கு சரியெனப்படுகிற தர்ம அவதாரத்தை எடுக்கிற நாயகன் என்ன ஆகிறான்? அதன் மூலம் அவர் எதிர்கொள்பவை என்ன? என்பதுதான் வணங்கான்.
கன்னியாகுமரி நகரில் கிடைத்த வேலைகளைச் செய்து, தன் தங்கையுடன் ( ரிதா) வாழ்ந்து வருகிறார் பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் சவாலுடைய மாற்றுத்திறனாளியான (கோட்டி) அருண் விஜய். அதே ஊரில் பாதி நேரம் டூரிஸ்ட் கைடாக, மீதி நேரம் அருண் விஜய்யைத் துரத்தித் துரத்திக் காதலிப்பவராகவும் இருக்கிறார் டீனா (ரோஷினி பிரகாஷ்). தங்கை மீது பேரன்பும், அநியாயங்கள் மீது பெருங்கோபமும் கொண்ட அருண் விஜய்யை நல்வழிப்படுத்த, அவரை மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவற்றோர் இல்லத்தில் வேலைக்குச் சேர்த்துவிடுகிறார், அருண் விஜய் மீது பிரியம் கொண்ட சர்ச் ஃபாதர்.
இந்நிலையில், அந்த இல்லத்தில் நடக்கும் ஒரு அநீதியைக் கண்டு வெகுண்டெழும் அருண் விஜய், தண்டனை கொடுக்க வன்முறையைக் கையிலெடுக்கிறார். அது என்ன அநீதி, அருண் விஜய் எடுக்கும் வன்முறை அவரையும், அவரின் சுற்றத்தாரையும் எப்படி பாதிக்கிறது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது பாலா இயக்கியிருக்கும் ‘வணங்கான்’.
பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் சவாலுடைய மாற்றுத்திறனாளியாகவும், ராவான ஆக்ஷன், சேட்டை, கோவம், உடல்மொழி போன்றவற்றில் ‘பாலா பட ஹீரோ’ என்ற சட்டையிலும், அருண் விஜய் பாஸ் ஆகிறார். ஆனால், எமோஷனலான காட்சிகளை முழுமையாகக் கடத்தப் போராடியிருக்கிறார். துறுதுறு கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ், பாசமான தங்கையாக ரிதா ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். ‘கண்டிப்பான சமுத்திரக்கனி’ கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும், ஆக்ரோஷ நீதிபதியாக மிஷ்கின் ஆகியோர் கவனிக்க வைக்க, சண்முகராஜா, அருள் தாஸ் ஆகியோர் வந்து போகிறார்கள்.
வள்ளுவர் சிலை, கன்னியாகுமரி கடற்கரை, அதையொட்டிய குடியிருப்பு போன்ற அறிமுகக் காட்சிகளைச் சுவாரஸ்யமாகக் கடத்தியதில் கவனம் பெறும் ஆர்.பி. குருதேவ்வின் ஒளிப்பதிவு, ஏனைய காட்சிகள் மேம்போக்கான திரையாக்கத்தையே கொடுத்திருக்கிறது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் போல கடகடவென ஓடும் காட்சிகளுக்கு உணர்வுப்பூர்வமான இடங்களில் சிகப்புக் கொடியைக் காட்டி, நிதானிக்க வைக்கத் தவறுகிறது சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு. ஜி.வி. பிரகாஷின் இசையில் ‘யாரோ நீ யாரோ’ பாடல் மட்டும் ஆறுதல் தர, ஏனைய பாடல்கள் படத்தின் சுவாரஸ்யத்திற்கு ஸ்ருதி சேர்க்காமல் தடையாக நிற்கின்றன. சாம் சி.எஸ்-ஸின் பின்னணி இசையில் சில உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு மட்டும் ‘எஸ் சார்’ என அட்டன்டன்ஸ் போடுகின்றன.
வழக்கமான பாலா ஹீரோ, வழக்கமான பாலா ஹீரோயின் ஆகியவற்றோடு, கன்னியாகுமரியின் சுற்றுலா – மத பின்புலம், டூரிஸ்ட் கைட் வேலை, ஹீரோவிற்கு இருக்கும் மாற்றுத்திறன், ஹீரோயினின் குடும்பம் போன்ற விஷயங்களால் சுவாரஸ்யமாகவே தொடங்குகிறது திரைக்கதை. ஆனால், பாடல்கள், தேவையில்லாத பெரிய சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள் என மீண்டும் மீண்டும் அதே திரிவேணி சங்கமத்தில் சிக்கி நிற்கிறது படம். ஒருவழியாகக் கதையைக் கையில் எடுக்கும் படம், தேவையான நிதானத்தைக் கொடுக்காமல் உணர்வுப்பூர்வமான காட்சிகளைக் கடகடவென அடுக்கிக்கொண்டே போகிறது. அதனால், உணர்வுப்பூர்வமாகப் பார்வையாளர்கள் திரையோடு ஒன்ற முடியவில்லை. அடிப்படைகளையும், ஆச்சாரங்களையும் கலாய்க்கும் பாலா பாணியிலான காமெடிகளும் வசனங்களும் மட்டும் இப்பிரச்னைகளை மறந்து சிரிக்க வைக்கின்றன.
இரண்டாம் பாதியில் வரும் திருப்பங்களும், காட்சிகளும் எந்தப் புதுமையும் லாஜிக்கும் இல்லாமல் ஓடுகின்றன. தொடக்கத்திலேயே உணர்வுப்பூர்வமாகப் பார்வையாளர்கள் விலகியே நிற்பதால், அடுத்தடுத்து வரும் எமோஷன்கள் திரையை மட்டுமே நனைக்கின்றன. சில காட்சிகளில் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்களின் கண்ணியத்தைக் காக்கத் தவறுகிறார் இயக்குநர். குறிப்பிட்ட அந்தக் காட்சியை இன்னும் பொறுப்புடன் கையாண்டிருக்கலாம் பாலா. அந்தக் குற்றத்தை அம்பலப்படுத்தி, அதற்கான தீர்வை நோக்கி நகராமல், மறைத்து வைக்கும் பழைய புனிதங்களுக்குப் பின்னால் பாதிக்கப்பட்டவர்களை மறைத்து வைக்கும் அபத்தத்தையும் கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர். அதீத வன்முறை, அதீத இரத்தம் என வலுக்கட்டாயமாக ரத்தக் கரையை நம்மீது பூசி, பொங்கலுக்கு ஹோலி பண்டிகை விளையாடுகிறது படம்.
வழக்கமான ஆக்ரோஷ நாயகன், வழக்கொழிந்து போன ‘போலி அறம்’, வலுக்கட்டாயமான வன்முறை போன்றவற்றை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கும் இந்த ‘வணங்கானுக்கு’ சம்பிரதாய வணக்கத்தை மட்டுமே வைக்க முடிகிறது.