மதுரை: “சீமானின் கருத்துகள் சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளன” என உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மதுரை கே.கே.நகர் ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்துள்ளார். அவரது கருத்து சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. பெரியார் சமூக நீதிக்காகவும், தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர். அவரைப் பற்றி அடிப்படை ஆதாரம் இல்லாமல் பொது வெளியில் அவதூறான கருத்துகளை சீமான் தெரிவித்துள்ளார்.
இதனால் சீமான் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. என் புகாரின் பேரில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய அண்ணாநகர் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “பெரியார் சமூக முன்னேற்றத்துக்கு குறிப்பாக பெண்கள் உரிமை, பெண்கள் கல்வி, பெண்கள் மேம்பாட்டுக்கு சேவையாற்றியுள்ளார். அவரைப் பற்றி சீமான் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, “சீமான் தெரிவித்த கருத்துகள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளன. எனவே மனுதாரரிடம் புகார் மனுவை பெற்று அண்ணா நகர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஜன.20-ல் போலீஸார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.
முன்னதாக, தமிழ் இனத்துக்கு எதிராக சிந்தித்தவர் பெரியார் என்பன உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை அண்மையில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். இது தமிழக சமூக – அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.