அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியார் புகழை மறைக்க முடியாது, தமிழகத்தில் அமைதியை குலைத்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார்.
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், சீமானின் கருத்து குறித்து திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமூக விடுதலைக்கான மாபெரும் தலைவரான பெரியார், தன் வாழ்நாளில் கடைசிநாள் வரை சமூக நீதிக்காக சளைக்காமல் பாடுபட்ட திராவிட இயக்க பெருந்தலைவர். மனதில் தோன்றிய சிந்தனைகளை எவருக்கும் அஞ்சாமல் துணிந்து கூறியவர். அவருடைய பகுத்தறிவு, சுயமரியாதை சிந்தனைகள் சமுதாயத்தின் இருட்டை விரட்டி வெளிச்சத்தை உண்டாக்கின.
மனிதர்களிடையே சாதி, மதம், மொழி, நிறம், பாலினம் என எந்தவகை ஏற்றத்தாழ்வும் இல்லாத சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். அவருடைய கொள்கை உறுதியின் விளைவாக, தேர்தல் களத்தையே காணாமல் தன் லட்சியங்களை அரசின் சட்டங்களாக, திட்டங்களாக மாறச்செய்து, வாழும் காலத்திலேயே நிறைவேறுவதைக் கண்டவர்.
பெரியாருடன், முரண்பட்டவர்களும்கூட அவருடைய தூய தொண்டினை, போராட்டக்குணத்தை, ஒளிவுமறைவின்றி கருத்துகளை வெளிப்படுத்தும் தன்மையைப் புகழத் தவறவில்லை.
உயர்ந்த சிந்தனை கொண்ட மனிதர்கள், தெளிந்த உள்ளம் கொண்ட தலைவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் தந்தை பெரியாரின் கருத்துகளை மதிப்பார்கள். அவரின் தொண்டினைப் போற்றுவார்கள். பெரியார் எந்த நேரத்தில், எந்தச் சூழலில், என்ன சொன்னார் என்று பெரியார் சொன்ன பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பார்த்து செயல்படுவார்கள்.
திமுக என்பதே பெரியாரிடமிருந்து பிரிந்து வந்து, பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட இயக்கம்தான். தந்தை பெரியாரின் லட்சியத்தை அரசியல் வழியில் முன்னெடுத்தார் அண்ணா. அப்போது இரு இயக்கங்களுக்கும் இடையே கருத்துமோதல்கள் இருந்தன. அவற்றையெல்லாம் கடந்துதான், 1967-ல் பெரியாரின் வாழ்த்துகளுடன் ஆட்சிப் பொறுப்பேற்று, இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை என்றார் அண்ணா.
பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி பெண்களுக்கு குடும்பச் சொத்தில் சமபங்கு கொடுத்தவர் கருணாநிதி. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றி, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட முனைந்தவரும் அவர்தான். அச்சட்டப்படி, அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி வழங்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் கடைப்டிக்கிறது திமுக அரசு.
பெரியாரின் கொள்கைகளே இன்றும் தமிழகத்தை வழிநடத்துவதால், இதை பெரியார் மண் என்கிறோம். சிலருக்கு இது புரிவதில்லை. பெரியார் என்ன சொன்னார் என்பது பற்றி தெரியாமல், அவர் சொல்லாதவற்றையும்கூட சொன்னதாக அபாண்டமாக அவதூறு பரப்பியும், யாருக்கோ ஏஜென்ட்டாக இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
மானமும் அறிவும் உள்ளவர்கள் பெரியாரை இழிவு செய்ய மாட்டார்கள். பெரியார், தான் வாழும் காலத்திலேயே பல எதிர்ப்புகளை நேரடியாக எதிர்கொண்டு, லட்சியப் போராட்டத்தில் வெற்றி கண்டவர். தன் மீதான அவதூறுகளை தனது கொள்கைத் தடியால் அடித்து நொறுக்கி, சமுதாயத்துக்கு விடியலைத் தந்தவர். அறிவிலிகளின் அவதூறுகளால் அவர் புகழை ஒருபோதும் மறைக்க முடியாது.
தந்தை பெரியார் புகழை நாம் என்றென்றும் போற்றுவோம். அவர் மீது அவதூறு பரப்பி விளம்பரம் தேட நினைக்கும் இழிவான மலிவான அரசியல் பேர்வழிகளைப் புறக்கணிப்போம். எதையாவது செய்து, தமிழகத்தின் அமைதியைக் குலைக்கலாமா என நினைப்பார்களேயானால் சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.