வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நெரிசலில் சிக்கி காயமடைந்த பக்தர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து காலையில் நடைபெற்ற தங்க தேர் திருவிழாவில் மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை திருப்பாவை சேவை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவருக்கு வெள்ளிக்கிழமை அபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதன் பின்னர் அதிகாலை 3.30 மணிக்கு விஐபி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் சொர்க்க வாசல் தரிசனம் தொடங்கியது.
இவர்களைத் தொடர்ந்து, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின்படி, கடந்த புதன் கிழமை தரிசன டோக்கன் வாங்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து குணமான சுமார் 30-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை தேவஸ்தானத்தினர் செய்தனர். அதன் பிறகு அவர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது.
பக்தர்களை கவரும் மலர் அலங்காரங்கள்: வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தானத்தின் தோட்டக்கலை துறை சார்பில் சிறப்பான மலர் அலங்காரம் மற்றும் மலர் கண்காட்சி பக்தர்கள் அனைவரையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.
ஏழுமலையான் கோயிலின் முகப்பு கோபுரத்தில் மகாவிஷ்ணு, லட்சுமியை மையப்படுத்தி மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சங்கு, சக்கரம், யானைகள், தாமரை என முகப்பு கோபுர சுவர் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோயில் எதிரே தனியாக மலர் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர திருமலையில் அனைத்து இடங்களிலும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
தங்கத் தேரில் மலையப்பர் பவனி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை 9 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் தங்க தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தி கோஷத்தில் மலையப்பரை வழிபட்டனர்.
துவாதசியையொட்டி, இன்று அதிகாலை 5.30 மணிக்கு திருமலையில் வராக சுவாமி கோயில் அருகே உள்ள புஷ்கரணியில் (குளத்தில்) சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஏழுமலையானை வழிபட்ட விஐபி பக்தர்கள்: திருப்பதி ஏழுமலையானை நேற்று அதிகாலை அபிஷேகத்தை தொடர்ந்து விஐபி பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த உயர்நீதி மன்ற நீதிபதிகள், மத்திய விமானத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ஆந்திர மாநில பேரவை சபாநாயகர் அய்யண்ண பாத்ருடு, துணை சபாநாயகர் ரகுராம கிருஷ்ணம்ம ராஜு, தெலங்கானா மாநில துணை முதல்வர் பட்டி விக்ரமார்க்கா, ஆந்திர மாநில அமைச்சர்கள் அனிதா, பார்த்தசாரதி, சவீதா, ராமாநாயுடு, ராம்தேவ் பாபா, விளையாட்டு வீரர் கோபிசந்த், நடிகர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் சுவாமியை தரிசனம் செய்தர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் முழுவதும் பலவித மலர்களாலும், மின் விளக்குகளாலும் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.