திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர். நாயுடு அறிவித்துள்ளார்.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர். நாயுடு தலைமையில் அவசர அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது.
இதில், சமீபத்தில் திருப்பதியில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த விவகாரம், நஷ்ட ஈடு வழங்குவது, நீதித்துறை விசாரணையை எதிர்கொள்வது, தொடர்ந்து தர்ம தரிசன டோக்கன் விநியோகம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் அறங்காவலர் குழு தலைவர் பிஆர். நாயுடு செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. நடக்க கூடாத சம்பவம் நடந்து விட்டது. அதற்காக வருந்துகிறோம். இனி அதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ள என்னவென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவாதித்தோம்.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியையொட்டி தொடர்ந்து 10 நாட்கள் வரை சொர்க்க வாசல் தரிசனத்தை தொடர்வோம். இதனை அடுத்த வைகுண்ட ஏகாதசிக்கும் தொடர வேண்டுமா அல்லது பழையபடி வெறும் 2 நாட்கள் மட்டும் சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகளை செய்யலாமா ? என பின்னாட்களில் ஆலோசித்து தீர்மானிக்கப்படும். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க முடிவு செய்துள்ளோம். தீவிர காயம் அடைந்து சிகிச்சை பெறும் 2 பக்தர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் தேவஸ்தானம் தரப்பில் வழங்க உள்ளோம்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியர்கள் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு பிஆர். நாயுடு தெரிவித்தார்.
அப்போது, நடந்த துயர சம்பத்துக்காக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், நிர்வாக அதிகாரி ஆகியோர் பக்தர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்திருந்தாரே? என கேட்டதற்கு, மன்னிப்பு கேட்டால் இறந்தவர்கள் உயிருடன் வந்து விடுவார்களா ? யார் யாரோ இதுபோல் பேசுவதற்கெல்லாம் பதில் கூட இயலாது. இனி நடக்கும் விஷயங்களை பார்ப்போம் என பிஆர் நாயுடு பதிலளித்தார். மேலும், நீதித்துறை விசாரணைக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளதால், அதற்கு கட்டுப்பட்டு நடப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்திய தேவஸ்தானம், தனது உறவினர்களுக்காக கேட் திறந்து 15 பேரை முன்னதாக வரிசையில் விட்ட போலீஸ் டிஎஸ்பி ரமண குமார், டோக்கன் மையத்தில் பொறுப்பு அதிகாரியாக இருந்த கோசாலை கண்காணிப்பாளர் ஹரிநாத் ரெட்டி ஆகிய இருவரையும் திருப்பதி தேவஸ்தானம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், திருப்பதி எஸ்பி சுப்பராயுடு சட்டம்-ஒழுங்கை காக்க தவறி விட்டார் எனும் காரணத்துக்காகவும், திருப்பதி தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர், தேவஸ்தான கல்வி மற்றும் மருத்துவ பிரிவின் ஐஏஎஸ் அதிகாரி கவுதமி ஆகியோர் தங்களுடைய கடமையை சரிவர நிறைவேற்ற வில்லை எனும் காரணத்துக்காகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.