உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷஹரைச் சேர்ந்த ஒரு பெண், “என் கணவர் அவருடைய இரண்டு நண்பர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்து கொடுமை செய்தார்” எனப் புகார் பதிவு செய்திருக்கிறார். இதுதொடர்பாக புலந்த்ஷஹர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்திருக்கும் புகாரில், “என் கணவர் சவூதி அரேபியாவில் ஆட்டோ மொபைல் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். எங்களுக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என் கணவன் இந்தியா வந்திருந்தபோது அவருடைய இரண்டு நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
என் கணவன் கண்முன்னே அவர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்கள். இதுகுறித்து பேசியபோது, அதைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கும்படிக் கூறினார். என் குழந்தைகளுக்காக அமைதியானேன். ஆனால், அவர் மீண்டும் வெளிநாடு சென்றபிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக என் கணவரின் இரண்டு நண்பர்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர். என்னை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோவை என் கணவருக்கு அனுப்பி, அவரும் அதை தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறார்.
இதற்காக என் கணவருக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் எனக்குத் தெரிந்து அவரிடம் கேட்டபோது, விவாகரத்து செய்துவிடுவேன் என மிரட்டினார். இப்போது அவர் இந்தியா வந்திருக்கிறார். என் சகோதரியின் கணவர் வீட்டுக்கு வந்திருந்தபோது, அவருக்கு இதுபற்றி தெரிந்ததால் என் குடும்பத்தாருக்கும் தெரிந்துவிட்டது. அவர்கள் கொடுத்த தைரியத்தால்தான் இப்போது என் கணவர் மீது வழக்குப் பதிவு செய்கிறேன்.
என் கணவர் மீது, அவருடைய இரண்டு நண்பர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை இதுவரை, அந்த இரண்டு நண்பர்களை கைது செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரித்து வருவதாக காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது.