சில மாதங்களுக்கு முன்னர் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயன மூர்த்தி ஊழியர்கள் அனைவரும் வாரத்துக்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இப்போது ஒருபடி மேலாக வாரத்துக்கு 90 மணிநேரம் பணியாற்ற வேண்டும் எனப் பேசியுள்ளார் லார்சென் & டர்போ நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன்.
“எனக்கு உங்களை (தொழிலாளர்களை) ஞாயிற்றுக்கிழமை வேலை பார்க்க வைக்க முடியவில்லையே என்று பெரிய வருத்தம் உள்ளது. வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்… எவ்வளவு நேரம் உங்கள் மனைவியையே பார்த்துகொண்டு இருக்க முடியும்?” என்ற எஸ்.என்.சுப்ரமணியன் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
தங்களது நிறுவனத்தின் இயக்குநர் இந்தியாவின் பெரும் வளர்ச்சியை கருத்தில்கொண்டு அந்தக் கருத்தைப் பேசினார் என அறிக்கை வெளியிட்டுள்ளது எல்&டி நிறுவனம்.
சுப்ரமணியன் பேச்சை ஒட்டி, பிற நாட்டு தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய தொழிலாளர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
இந்திய தொழிலாளர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்களா அல்லது சுரண்டப்படுகிறார்களா?
ஒரு வாரத்தில் அதிக நேரம் வேலைப்பார்ப்பதால் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்குமா?
தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்துக்காக பல மணிநேரம் உழைப்பது நாட்டை உலக அரங்கில் உயர்த்த உதவுமா?
சர்வதேச தொழிலாளர் சங்கம் தரும் தரவுகள் அடிப்படையில் இன்னும் பல கேள்விகளுக்கான பதில்களை இங்கு ஆராயலாம். எந்தெந்த நாட்டில் எவ்வளவு மணிநேரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர், அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதைக் காணலாம்.
அதிக வேலை நேரம், குறைந்த ஊதியம்!
இந்தியாவில் சராசரியாக ஒரு ஊழியரின் வேலை நேரம் 46.7 மணிநேரம் என்கிறது சர்வதேச தொழிலாளர் சங்க தரவு. அதிக வேலை நேரம் உள்ள நாடுகளின் பட்டியலில் காம்பியா, மங்கோலியா, மாலத்தீவு மற்றும் கத்தார் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.
இங்கு ஒவ்வொருவாரமும் 49 மணிநேரம் அல்லது அதற்கு மேல் பணியாற்றுபவர்கள் 51.4 விழுக்காடு. குறைந்த பட்ச மாத வருமானம் 220 டாலர்கள், இந்திய மதிப்பில் 18,963 ரூபாய்.
இதுவே மத்திய கிழக்கு நாடான ஈரானில் 49 மணிநேரம் அல்லது அதற்கு மேல் பணியாற்றுபவர்கள் 31.9% அவர்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச மாத வருமானம் 58,699 ரூபாய். பெரும்பாலான நாடுகள் இந்தியாவை விட குறைவான வேலை நேரமும் அதிக வருமானமும் தருகின்றன. சில நாடுகளை ஒப்பிடலாம்…
சுவிட்சர்லாந்தில் வெறும் 9.4% பேர்தான் 49 மணிநேரத்துக்கு மேல் பணியாற்றுகின்றனர். ஆனால் அங்குள்ள தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 2,78,066 ரூபாய்.
ஆஸ்திரியாவில் 11.8% பேர்தான் அதிகநேரம் பணியாற்றுகின்றனர். அங்குள்ள தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 1,97,990 ரூபாய்.
ஆனால் 51.4% தொழிலாளர்கள் 49 மணிநேரத்துக்கும் மேல் உழைப்பைக் கொட்டும் இந்தியாவில் குறைந்தபட்ச ஊதியம் வெறும் 18,963 ரூபாய்.
நமக்கு நிகரான மக்கள் தொகை கொண்ட அண்டை நாடான சீனாவில் கூட குறைந்தபட்ச ஊதியம் 43,270 ரூபாய்.
அதிக நேரம் உழைத்தால் நாடு வளர்ந்துவிடுமா?
இத்தனை அதிக நேரம் உழைப்பை செலுத்துவதனால் நம் நாடு வளர்ந்துவிடும் என்கிறீர்களா? இந்தியாவில் ஒருமணி நேர தொழிலாளர்கள் உழைப்பு இந்தியாவின் ஜி.டி.பி -யில் 8 டாலர்கள் அதிகரிக்கிறது. சீனாவில் 15 டாலர், அமெரிக்காவில் 70 டாலர்.
GDP per Working Hour பட்டியலில் இந்தியா 133-வது இடத்தில் உள்ளது.
லக்சம்பெர்க் நாட்டில் ஒருவாரத்துக்கான வேலை நேரம் வெறும் 40 மணிநேரங்கள்தான். ஆனால் ஒரு மணிநேர தொழிலாளர் உழைப்புக்கான ஜி.டி.பி 143 டாலர்கள்.
இந்தியாவில் அதிக நேரம் உழைப்பு சுரண்டப்பட்டாலும் உற்பத்தி திறன் அதிகரிக்காமல் இருப்பதற்கு திறனற்ற வேலை கலாச்சாரம், பணிச்சூழல், வேலைகளின் தரம் மற்றும் துறைசார் விநியோகம், கல்வித்தரம், சுகாதாரம், தொழில்நுட்ப முன்னேற்றம் இல்லாதது எனப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக கருதப்படுவது நீண்ட நேரம் தொழிலாளர்கள் பணியாற்றுவதுதான்.
நீண்ட வேலை நேரம் சோர்வை ஏற்படுத்துவதுடன், மன மற்றும் உடல் ஆரோக்கியம் குறைவதற்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 55 மணிநேரத்தும் மேலாக பணியாற்றுவதுதான் பணியிட மரணங்களுக்கு முக்கிய காரணம் என்கிறது சர்வதேச தொழிலாளர் சங்கம்.
Productivity -யும் வேலை நேரமும்…
நெதர்லாந்தில் வேலைநேரம் 29.5 மணிநேரம் தான். ஆனால் குறைந்தபட்ச ஊதியம் 1,83,941 ரூபாய். ஜெர்மனியில் 25.8 மணிநேரம் தான். குறைந்தபட்ச ஊதியம் 1,33,621 ரூபாய். இதேப்போல பல உதாரணங்களைத் தொடர்ந்து கூறலாம்.
பிற நாடுகளைப் போல இந்தியர்களுக்கும் அதிக ஊதியம் வழங்க முடியாததற்கு பல காரணங்கள் இருக்கலாம். நாட்டின் 1% பெரும் பணக்காரர்களிடம் 40.1% சொத்துகள் குவிந்திருக்கும் நாடு நம் நாடு.
இங்கு ஊழியர்கள் சுரண்டப்படுவதுடன் அந்த 1% பெரும் பணக்காரர்களுள் ஒருவராகிய நாராயண மூர்த்தி, எஸ்.என்.சுப்ரமணியன் போன்றோரின் பேச்சுகளால், தொழிலாளர்கள் தாங்கள் சுரண்டப்படுவதை மறந்து, குறைவாக பணியாற்றுகிறோம் என்ற குற்ற உணர்ச்சிக்கும் ஆளாவதற்கான வாய்ப்புகள் உண்டு. இது அவர்களது மனநலனை மேலும் பாதிக்கும்.
உற்பத்தி திறன் (Productivity) என்பது வேலை நேரத்தைக் கடந்து தொழிலாளர்களின் (Employees) திறமையைச் சார்ந்தது. அதிக வேலை நேரம் தொழிலாளர்களின் உடல், மன நலனை சுரண்டுவதன் மூலம் உற்பத்தி திறனை குறைக்கும் காரணியாகவே மாறுகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைத்து அதிக தொழிலாளர்களை பணியமர்த்துவது உதவக்கூடும் என்கிறது உலகளாவிய மேலாண்மை ஆலோசனை நிறுவனம் மிக்கின்ஸ்கியின் அறிக்கை.