கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி சமீப காலமாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தியது.
தென் ஆப்பிரிக்க அணியில் தற்போது இளம் வீரரான க்வானா மகாபா தனது பந்துவீச்சால் அசத்தி வருகிறார். 18 வயதே நிரம்பிய மகாபா தென் ஆப்பிரிக்க அணிக்காக அனைத்து வித கிரிக்கெட்டிலும் அறிமுகம் ஆகிவிட்டார். இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணிக்கு ஒரு ரத்தினம் கிடைத்துள்ளதாக க்வானா மகாபாவை இந்திய முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
அவர் ஒரு சிறந்த வீரர். ஏனென்றால், அவர் பந்து வீசும் விதத்தில் அதை காணலாம். நான் எதிர்பார்க்கும் அளவிற்கு சூப்பர் ஸ்டார் ஆக வருவதற்கான திறமைகள் அனைத்தும் அவரிடம் இருப்பதாக உணர்கிறேன். தென் ஆப்பிரிக்க அணிக்கு தற்போது ஒரு ரத்தினம் கிடைத்துள்ளது. அவர்கள் அவரை பாதுகாக்க வேண்டும். மேலும், தனது உடலை எந்த அளவில் பராமரித்துக் கொள்ள வேண்டும் என்கிற கவனமும் அவரிடத்தில் மிகவும் தேவை.
அவர் தனது உடலை எப்படி பராமரித்து கொள்கிறார் என்பது மிகவும் முக்கியம். ஆனால் ஒவ்வொரு முறையும் களமிறங்கும் போதும் தனது மனதளவில் அணியை எப்படி வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.