புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், லூதியானா மேற்கு தொகுதியின் எம்எல்ஏ-வுமான குர்பிரீத் பாஸி கோகி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். உரிமம் பெற்ற தனது சொந்த கைத்துப்பாக்கி மூலம் தற்செயலாக சுட்டுக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துணை காவல் ஆணையர் (டிசிபி) ஜஸ்கரன் சிங் தேஜா, “அவர் தற்செயலாக தன்னைத்தானே தலையில் சுட்டுக் கொண்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். டிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குர்பிரீத் கோகி, இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கைகள் வந்தவுடன் மரணத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியும். சம்பவம் நள்ளிரவில் நடந்துள்ளது. அவர் DMC மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. விசாரணைகள் நடைபெற்று வருகின்றன” என்று கூறினார்.
இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, சட்டப்பேரவை சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான் மற்றும் ஆம் ஆத்மி எம்பி பல்பீர் சிங் சீசெவால் ஆகியோரை, குர்பிரீத் பாஸி கோகி சந்தித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு திருட்டு நடந்த பிஆர்எஸ் நகரில் உள்ள பிரச்சின் ஷீத்லா அம்மன் கோயிலையும் அவர் பார்வையிட்டுள்ளார்.
குர்பிரீத் பாஸி கோகியின் மறைவு ஈடுசெய்ய முடியாதது என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டள்ள எக்ஸ் பதிவில், “குர்பிரீத் பாஸி கோகியின் அகால மரணம் குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். தனது தொகுதி மக்களுக்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் இரக்கத்துடன் சேவை செய்த ஒரு தலைவர் அவர். அவரது மறைவு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
இந்த கடினமான நேரத்தில் துக்கத்தில் வாடும் அவரது குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. அவர்கள் வலிமையையும் ஆறுதலையும் பெறட்டும். அவரது குடும்பத்தினருடனும் லூதியானா மக்களுடனும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். குர்பிரீத் பாஸி கோகியின் தொண்டு எப்போதும் நினைவுகூரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
2022ல் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த குர்பிரீத் பாஸி கோகி, அதே ஆண்டு லூதியானா மேற்கு தொகுதியில் போட்டியிட்டு, அத்தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பாரத் பூஷண் ஆஷுவை தோற்கடித்தார். அவரது மனைவி சுக்சைன் கவுர் கோகி, கடந்த மாதம் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2022ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன்பு லூதியானாவில் நகராட்சி கவுன்சிலராக குர்பிரீத் பாஸி கோகி இரண்டு முறை பணியாற்றியுள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது பஞ்சாப் சிறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதிக் கழகத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். 2014 முதல் 2019 வரை லூதியானா மாவட்ட காங்கிரஸ் (நகர்ப்புற) தலைவராக குர்பிரீத் பாஸி கோகி இருந்துள்ளார்.