புதுடெல்லி,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணிகளை நாளைக்குள் அறிவிக்க வேண்டும் என 8 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கும் ஐ.சி.சி. அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்திய அணி குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வீரர்களின் பட்டியலை வெளியிட தயாராக இல்லை என தெரிகிறது. இதனால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) கோரிக்கை வைத்துள்ளது.
இதனால் இந்திய அணி அறிவிப்பு தாமதமாகலாம் எனத் தெரிகிறது. சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இந்தியா இங்கிலாந்து அணிக்கெதிராக 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான அணியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இங்கிலாந்து அணியில் இடம் பெறும் பெரும்பாலான வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. இந்திய அணி குறித்த அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.