வருமான வரித்துறையினர் சோதனைக்கு சென்ற இடத்தில் முதலைகள் மற்றும் பிற ஊர்வனவற்றை செல்லபிராணியாக வளர்ப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலம், சாகர் மாவட்டத்தில் வசிக்கிறார் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஹர்வன்ஷ் சிங் ரத்தோர். இவரது வீடு மற்றும் இவருக்கு தொடர்புடைய இடங்களிலும், பீடி தயாரிப்பாளர் மற்றும் கட்டட காண்ட்ராக்டரான ராஜேஷ் கேஷாவானிக்கு சொந்த இடங்களிலும் கடந்த ஞாயிறு முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
ஹர்வன்ஷ் சிங் ரத்தோர் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 10-ம் தேதி அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்ட போது, ரத்தோரின் வீட்டில் முதலை மற்றும் பிற ஊர்வனவற்றை வளர்ப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
வனத்துறைக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டதும், அதிகாரிகள் விலங்குகளை மீட்டுள்ளனர்.
இது குறித்து மத்திய பிரதேச வனப் படையின் தலைவர் அசீம் ஸ்ரீவஸ்தவா ஊடகங்களில் பேசுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலைகளின் உடல் நலம் சோதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நீதிமன்றத்தில் தெரிவித்து, மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலைகள் பிடிபட்ட வீட்டின் உரிமையாளர் ரத்தோர் தானா என்பதை வனத்துறை அதிகாரி உறுதிபடுத்தவில்லை. எத்தனை முதலைகள் மற்றும் என்னென்ன விலங்குகள் கிடைக்கப்பெற்றன என்பதையும் வெளியில் தெரிவிக்கவில்லை.