சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வங்காளதேச முன்னணி வீரர்

டாக்கா,

வங்காளதேச அணியின் அதிரடி தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான தமிம் இக்பால் (வயது 35) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் வங்காளதேச அணிக்காக 70 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5134 ரன்னும், 243 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8357 ரன்னும், 78 டி20 போட்டிகளில் ஆடி 1758 ரன்னும் அடித்துள்ளார்.

இவர் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதமே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், அப்போதைய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலையீட்டிற்குப் பிறகு அடுத்த நாளே தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்காளதேச அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிம் இக்பால் திடீரென அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.