மனம் விரும்பும் புண்ணிய ஸ்தலங்கள் – என் புத்தாண்டு அனுபவப் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்.

இந்தமுறை வருடப்பிறப்பு முதல் வாரத்திலேயே மந்த்ராலயமும் பின் திருமலை திருப்பதியும் சென்று வர‌ வாய்ப்புக் கிடைத்தது. கோவையிலிருந்து மந்த்ராலயம் ரோடு ஜங்ஷன் வரை ரயிலில் பயணம்.

பின் அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் மந்த்ராலயம் வரை சென்றோம். மதிய நேரம் என்பதால், குளிர் கொஞ்சம் குறைவாக உணர்ந்தேன். வழிநெடுகிலும் பருத்திச் செடிகளும், மிளகாய் செடிகளும், கனகாம்பரம்‌ செடிகளும் கண்ணைக் கவர்ந்தன.

போக்குவரத்து நெரிசல் இல்லாத அகன்ற சாலைகள், இதமான‌ வானிலை, இருபக்கமும் வயல்வெளிகள் என சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலான ஆட்டோ சவாரி, ஏசி ட்ரெயின், ஏசி கார், விமானம் இவற்றில் எல்லாம் செல்வதை விட நன்றாக இருந்தது.

மந்த்ராலயம் சென்று குரு ராகவேந்திரரை தரிசிக்க மதியம் ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அதிக கூட்டம் இல்லாமல் நிம்மதியாக சிறிது நேரம் பிருந்தாவனம் முன் நின்றதில் மனம் திருப்தியடைந்தது. பின் மடத்திலேயே அருமையான ருசியான‌ உணவும் கிடைத்ததில், பிரயாண களைப்பு மறைந்தே போனது.

அங்கிருந்து மீண்டும் ஆட்டோ பிடித்து பிட்சாலயா மற்றும்‌ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றோம்..‌ இம்முறை ஷேர் ஆட்டோவின் பின்‌ பகுதியில் இருந்த சீட் தான் கிடைத்தது.‌ வாழ்க்கையில் இயற்கை அழகுடன்‌ கூடிய இடங்களுக்குச் செல்கையில், இப்படி பின் சீட்டில் அமர்ந்து பிரயாணம் செய்து பாருங்கள்.

அது எவ்வளவு சுகம் எனத் தெரிய‌வரும். வழியெங்கும் மீண்டும் வயல்வெளிகள், நடுவில் பாலத்தின் இருபுறமும் ஓடிக்கொண்டே இருக்கும் துங்கபத்திரை ஆறு, அந்தி சாயும் நேரம் என கவிதைத்துவமாக இருந்தது பயணம்.

பிட்சாலயா குரு ராகவேந்திரரும், அப்பண்ணாச்சாரியரும் ஒன்றாக இருந்து தங்கிய இடம்.

பார்க்கவே அழகாக இருக்கிறது. குரு ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால், அவருக்கும் அப்பண்ணாச்சாரியருக்கும் இருந்த குரு சிஷ்யன் உறவு புரியும். அப்பண்ணாச்சாரியர் தன்னை ஜீவசமாதி அடைய‌ ஒரு பொழுதும் விடமாட்டார் என ராகவேந்திரருக்குத் தெரியும். அதனாலேயே, அவர் அங்கு இல்லாத நேரம் பார்த்து குரு‌ அவர்கள் மந்த்ராலயம் சென்று ஜீவசமாதி அடைந்தார்.

ஸ்ரீ ராகவேந்த்ரா சுவாமி திருக்கோவில்

அதே போல் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. மந்த்ராலயம் செல்பவர்கள் இவ்விரண்டு இடங்களையும் பார்க்கச் செல்வது நலம். திரும்பி வரும் வழியில் பள்ளிச் சிறுவர்களின்‌ நடமாட்டம் அங்கங்கே இருந்தது. அவர்கள் கையசைத்து டாடா சொல்ல, நாமும் டாடா எனக் கையசைத்தால், அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகி விடுகிறது. உருவங்கள் மறையும் வரை சிரித்தபடியே டாடா சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

அதிலும் ஒரு சிறுவன் ஒரு சில நொடிகள் நின்று ஒரு‌ டான்ஸ் ஸ்டெப் போட்டு மீண்டும் டாடா சொன்னது, வியப்பில் ஆழ்த்தியது. நான் ரசித்ததை, கேமரா மூலம் பதிவு செய்யாமல் விட்டு விட்டோமே என வருந்தினேன். பயணங்களின் சுவாரஸ்யங்கள்.., ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான‌ அனுபவம். யாரென்றே தெரியாத மனிதர்கள் , ஆயினும் அந்தக் குழந்தைகள் சிரிக்கக் கற்றுக் கொண்டிருக்கின்றனர்..

அவர்களைக் கடந்து வந்த பிறகு, அவர்களைப் போலவே வெகுளித்தனமும், மகிழ்ச்சியும் நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டது போல் ஓர் உணர்வு..

மந்த்ராலய‌ மகானின் தரிசனம் முடிந்து, மீண்டும் ரயிலேறி திருமலை பயணம். புத்தாண்டின் முதல் வாரம் வெங்கடாசலபதி யின் தரிசனத்திற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ என யோசித்தேன். ஆனால் கூட்டம் இருந்தும் எங்கும் நிற்காமல், சுலபமாகவே தரிசனம் கிடைத்தது. கீழே திருச்சானூர் பத்மாவதி தாயாரின் தரிசனமும் கிடைத்ததில் மனம் லேசாகியது.

திருப்பதி கருட சேவை

மந்த்ராலயம் போன்ற இடங்களுக்குச் செல்கையில், அங்கேயே தங்கி இருந்துவிடலாமா எனத் தோன்றும். எதற்காக எதை சாதிக்க வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

இப்படி ஒரு‌ பிருந்தாவனம், அதன் பிரகாரத்திலேயே காலையும், மாலையும் சுற்றி வந்து பக்தியோடு வாழும் வாழ்க்கை முறை அமையாதா என நினைத்துக் கொண்டேன்.‌

உண்மை நிலவரம், முழுதாக இரண்டு நாள்கள் கூட அங்கே தங்க முடியாத நிலை தான், கடமைகள் மீண்டும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கே திரும்ப அழைத்துக் கொண்டு விடும். 

இருந்தாலும் என்ன? முடிந்த போதெல்லாம் அவரை பார்க்க நம்மை அழைத்து விடுகிறார்களே,  ராகவேந்திரரும், மலையப்பனும், அந்தத் திருப்தி ஒன்று போதுமே…

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.