இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக உள்ளூரில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் ஆடவிருக்கிறது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. காயத்தால் ஓய்விலிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 13 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கிறார்.
ஜனவரி 22 ஆம் தேதி முதல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் ஆரம்பமாகவிருக்கிறது. கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே, மும்பை ஆகிய நகரங்களில் இந்த டி20 போட்டிகள் நடக்கவிருக்கிறது. இதற்காக சூர்யகுமார் தலைமையிலான அணியை பிசிசிஐ இப்போது அறிவித்திருக்கிறது.
வீரர்கள் பட்டியல்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், நிதிஷ் குமார், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரேல்.
முகமது ஷமி கடைசியாக 2023 ஆம் ஆண்டில் நடந்த ஓடிஐ உலகக்கோப்பையில் ஆடியிருந்தார். கால் பாதம் மற்றும் முட்டி ஆகிய பகுதிகளில் ஷமிக்கு காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் ஓய்விலிருந்த ஷமி, சமீபத்தில்தான் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் சிகிச்சைகளையும் பயிற்சிகளையும் எடுத்து உள்ளூர் போட்டிக்கு திரும்பினார். பார்டர் கவாஸ்கர் தொடரிலேயே ஷமி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் முழுமையாக குணமடையாததால் அது சாத்தியமில்லாமல் போனது.
வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் என இரண்டு தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கின்றனர். சமீபமாக டி20 போட்டிகளில் அதிரடியாக பெரிய இன்னிங்ஸ்களை ஆடும் சாம்சனும் தன்னுடைய இடத்தை தக்கவைத்திருக்கிறார்.
அணித்தேர்வை முடித்துக் கொண்டு பிசிசிஐயின் முக்கிய நிர்வாகிகள், பார்டர் கவாஸ்கர் தோல்வி குறித்து கம்பீர் மற்றும் ரோஹித்திடம் முக்கிய ஆலோசனையையும் மேற்கொண்டு வருகின்றனர்.