பிரயாக்ராஜ்: உலகின் மிக பெரிய ஆன்மிகம், கலாச்சாரம் நிகழ்வாக கருதப்படுவது மகா கும்பமேளா நிகழ்ச்சியாகும். 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகா கும்பமேளா வரும் 13-ம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் தொடங்கவுள்ளது.
இந்த மகா கும்பமேளா விழா, வரும் பிப்ரவரி 26-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறும். 45 நாட்கள் நடைபெறும் இந்த மகா கும்பமேளா மகா சிவராத்திரியுடன் கோலாகலமாக நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவுள்ளனர். இதற்காக கங்கா, யமுனை, சரஸ்வதி நதிகள் ஒன்றுகூடும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
உலகம் முழுவதும் உள்ள ஆன்மிக பக்தர்கள், கலாச்சார விரும்பிகள், துறவிகள் நாள்தோறும் பிரயாக்ராஜ் நகருக்கு படையெடுத்து வருகின்றனர். இதுவரை லட்சக்கணக்கான பேர் அங்கு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மகாகும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜ் நகரை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில் 10 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபடவுள்ளதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
இதற்காக ஸ்வச் கும்ப் நிதியிலிருந்து தூய்மைப் பணியாளர்களுக்கு தங்கும் இடம், உணவு, அவர்களது குழந்தைகளுக்கு இலவசக் கல்வி ஆகியவற்றை உத்தரபிரதேச அரசு வழங்கவுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் அங்கு தூய்மைப் பணிக்கு பயன்படுத்தப்படும். இதனால் அங்கு நச்சுப்புகை பரவாது. மேலும் அதிக சத்தமும் இருக்காது.
கும்பமேளா நடைபெறும் பகுதியில் சுமார் 1.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கழிப்பறைகளை தூய்மைப்படுத்த ஜெட் ஸ்பிரே தூய்மை இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், கும்பமேளா பகுதியில் விழும் குப்பையை வாரிக் கொட்டுவதற்காக ரூ.45 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
படித்துறை பகுதிகள், நடைபாதைகள், சாலைகள், மக்கள் கூடும் இடங்களை அடிக்கடி சுத்தம் செய்வதற்காக இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், திரிவேணி சங்கமம் பகுதியில் கொசுக்களை ஒழிப்பதற்காக, தானியங்கி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் அடிக்கடி வெளியாகும் புகை, கொசுக்களை ஒழிக்கும்.
அதுமட்டுமல்லாமல் விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினர் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மலேரியா காய்ச்சல் வருவதைத் தடுப்பதற்காக 45 மலேரியா இன்ஸ்பெக்டர்கள், 28 உதவி மலேரியா இன்ஸ்பெக்டர்களும் பணியில் இருப்பர்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள 1.5 லட்சம் கழிப்பறைகள், கியூஆர் கோட் முறையில் கண்காணிக்கப்பட்டு அடிக்கடி சுத்தம் செய்யப்படும். அப்படி ஏதாவது கழிப்பறை சுத்தம் செய்யப்படாமல் இருந்தால், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் செயலி மூலம் கண்டறியப்பட்டு கண்காணிப்பாளர்களுக்கு தகவல் தரப்படும். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு வந்து சுத்தம் செய்வர்.
மேலும், கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வதற்காக 1,500 கங்கா சேவாதூத் எனப்படும் தன்னார்வலர்கள் பணியில் இருப்பர் என உத்தரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. அவர்கள் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வர்.
அதுமட்டுமல்லாமல் அங்கு பணியில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் ஸ்வச்தா மித்ரா சுரக் ஷா பீமா திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.