புதுடெல்லி: ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கையால் டெல்லி அரசுக்கு ரூ.2,026 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதனை ஆம் ஆத்மி கட்சி நிராகரித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை குறித்த சிஏஜி அறிக்கை கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், ஆம் ஆத்மி அரசால் வகுக்கப்பட்ட கலால் கொள்கையால் மாநிலத்துக்கு ரூ.2,026 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. டெல்லியில் பிப்ரவரி 5-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த விகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.
இதுகுறித்து பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கையில் அரசு கருவூலத்துக்கு ரூ.2,026 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி கட்டுவதாக வாக்குறுதி அளித்துவிட்டு மதுக்கடைகளை ஆம் ஆத்மி திறந்துள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் மதுபான ஊழலில் ஆம் ஆத்மி மும்முரமாக இருந்துள்ளது” என்றார்.
ஆனால் வெளியான அறிக்கை போலியானது என ஆம் ஆத்மி கூறியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காக்கர் கூறுகையில், “பாஜக மீண்டும் அதே பழைய குற்றச்சாட்டை சுமத்துகிறது. சிஏஜி அறிக்கை என்று சில பக்கங்களை காட்டுகிறது. இது போலியானது. பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.