சென்னை: “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார் பழனிசாமி. இப்படிதான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலையும் புறக்கணித்தார். இது தேர்தல் புறக்கணிப்பு அல்ல. பழனிசாமி தலைமை மீதான ஆளுமை அசிங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது” என்று திமுக மூத்த தலைவரும், அமைச்சருமான எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டப்பேரவையில் முதல்வரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பயந்து ஓடிய பழனிசாமி, வெளியே சென்று வழக்கம் போலவே தன் உளறல்களை பேட்டியாக கொட்டியிருக்கிறார். சட்டப்பேரவையில் முதல்வரும் அமைச்சர்களும் சான்றுகளுடன் தோலுரித்த விரக்தியில் செய்தியாளர்களிடம் வண்டி வண்டியாக பொய்களை கொட்டியிருக்கிறார் பழனிசாமி. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார் பழனிசாமி. இப்படிதான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலையும் புறக்கணித்தார். இது தேர்தல் புறக்கணிப்பு அல்ல. பழனிசாமி தலைமை மீதான ஆளுமை அசிங்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது.
2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2019-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2021-ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022-ல் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் என தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்றவர்தான் பழனிசாமி.
ஈரோடு கிழக்கு தேர்தலிலும் தோற்று, ‘11 தோல்வி பழனிசாமி’ என்ற அவப்பெயரை துடைக்க தேர்தலில் போட்டியிடாமல் கோழை போல பழனிசாமி களத்தைவிட்டே ஓடியிருக்கிறார். தன்னுடைய எஜமான் பாஜகவின் ஓட்டு வங்கிக்கு சேதாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காக பழனிசாமி தேர்தல் புறக்கணிப்பு என்ற கூத்தை அரங்கேற்றியிருக்கிறார். தான் அசிங்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அதிமுகவையே பலிபீடமாக்கியிருக்கிறார். 2026 சட்டசபை தேர்தலுக்காவது வருவாரா? அல்லது ஓடி ஒளிவாரா?
‘சட்டசபையில் நான் 2 மணி நேரம் பேசிய வீடியோவை கேட்டால் தரவில்லை’ என சொல்லியிருக்கிறார் பழனிசாமி. உங்கள் ஆட்சியின் லட்சணம் என்ன என தெரிந்து கொண்டாவது பழனிசாமி பேட்டி கொடுத்திருக்கலாம். அதிமுக ஆட்சியில், ‘சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்’ என ஜெகதீசன் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில், ‘நிதி நெருக்கடி காரணமாக நேரடி ஒளிபரப்புக்கு வாய்ப்பில்லை’ என்று நீதிமன்றத்தில் கையை விரித்தவர்கள்தான், இன்று நேரடி ஒளிபரப்பை செய்யும் எங்களைப் பார்த்து வியாக்கியானம் பேசுகிறார்கள்.
அதிமுகவின் பத்தாண்டு ஆட்சியில் சட்டசபை நடவடிக்கைகளை அரசின் திரைப்படப் பிரிவின் சார்பில் வீடியோ எடுத்து எடிட் செய்து அவர்கள்தான் டிவிக்களுக்கு வழங்கினார்கள். அதில் ஆளும் கட்சியின் நடவடிக்கைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. எதிர்க்கட்சியினர் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பது நினைவில் இல்லையா?
மாணவர்களின் மருத்துவ கனவை சீரழிக்கும் நீட் தேர்வை தனது ஆட்சிக்காலத்தில் பாஜகவுடன் சேர்ந்து கொண்டு வந்து துரோகம் செய்தவர் பழனிசாமி. அதை மறைக்க திராவிட மாடல் அரசின் மீது வீண்பழியை சுமத்துகிறார். நீட் தேர்வை ரத்து செய்ய ஏ.கே.ராஜன் கமிட்டி நியமனம், அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டமன்றத்தில் நீட் ரத்து மசோதா என நீட் தேர்வை ரத்து செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை வழிகளிலும் திராவிட மாடல் அரசு முயற்சிகளை செய்து வருகிறது என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசியல் ரீதியாகவும் சட்டரீதியாகவும் போராடியது. அப்படி நடத்திய போராட்டங்களை அதிமுகவால் பட்டியல் காட்ட முடியும்?
“நீட் தேர்வு விலக்கு மசோதா கிடப்பில் போடப்பட்டு, வழக்கு நீதிமன்றத்துக்கு வந்து ஓராண்டுக்கு வெளியிலேயே தெரியாமல் அதிமுக ஆட்சியில்தான் இருந்தது. சட்டப்பேரவையில் கூட நீங்கள் தெரிவிக்கவில்லை” என முதல்வர் கேள்வியெழுப்பி பழனிசாமியின் துரோகத்தை தோலுரித்தார். அதற்கு பதில் சொல்ல பழனிசாமிக்கு துணிவு இருந்ததா?
நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என பிடிவாதமாக நடைமுறைப்படுத்தி வரும் பாஜகவோடு அதிமுக கள்ளக் கூட்டணி வைத்திருக்கிறது. அந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என ‘இண்டியா’ கூட்டணியை வலுப்படுத்தியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். ராகுல் காந்தியும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தார். துரதிர்ஷ்டவசமாக மீண்டும் பாஜக ஆட்சிக் கட்டிலேறிவிட்டது.
நீட் தேர்வை ரத்து செய்யாமல் ஆதிக்கம் செய்யும் தனது கள்ளக் கூட்டாளி பாஜகவைப் பற்றி விமர்சிக்க பழனிசாமிக்கு மனம் வரவில்லையே ஏன்? எடப்பாடி பழனிசாமி உறவினர் என்.ராமலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து 5-வது நாளாக வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது. அடுத்து நம்ம வீட்டுக்கு வந்துவிடுவார்களோ என்ற பயம் பழனிசாமிக்கு இருக்குமல்லவா?
மகளிர் உரிமைத் தொகையையும், மகளிர் விடியல் பயணத்தையும் இழிவுப்படுத்தி பேசியிருக்கிறார் பழனிச்சாமி. அவருடைய ஆட்சியில் காயலான் கடை கணக்காக ஓடிக்கொண்டிருந்த பேருந்துகளை அகற்றிவிட்டு, புதிய பேருந்துகள் வாங்கி தமிழகம் முழுக்க விட்டிருக்கிறது திராவிட மாடல அரசு. அதிலும் மகளிர் இலவச பயணம் செய்யக்கூடிய பேருந்துகளை முற்றிலும் புதுமையானதாகவும் சிறப்பானதாகவும் வடிவமைத்து விட்டிருக்கிறோம். இதெல்லாம் பேருந்தில் செல்பவர்களுக்கு தெரியும். எடப்பாடி பழனிச்சாமிக்கு எப்படி தெரியும். விடியல் பயணம் திட்ட பஸ்ஸுக்கு லிப்ஸ்டிக் அடித்து விட்டுள்ளார்கள் என்று கொச்சைப்படுத்தி ஒட்டுமொத்த மகளிரையும் கேவலப்படுத்தியிருக்கிறார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 5 லட்சம் கோடிக்கும் மேலாக கடன் வாங்கியபோதும் அதனால் தமிழகத்தின் வளர்ச்சிக்கோ தமிழக மக்கள் பயன் பெறும் சிறப்பு திட்டம் எதையும் செயல்படுத்தாமல் ஊழல் ஆட்சி நடத்திய பழனிசாமி தமிழகத்தின் பொருளாதாரத்தை வரலாற்றில் இல்லாத வகையில் உயர்த்தி தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் அரசின் திட்டங்களின் மூலம் பயனடைய செய்திருக்கும் திராவிட மாடல் அரசைப் பற்றி குறை சொல்வதற்கு எந்த அருகதையும் கிடையாது.
கடன் வாங்கி மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், தமிழ் புதல்வன், விடியல் பயணம் போன்ற மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்கிறார்கள் இந்த கடனை எப்போது அடைப்பார்கள் என்று என்னவோ ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக எடப்பாடி ஆதங்கப்பட்டிருக்கிறார். அந்த கடனை அடைக்கும் திறனும் திறமையும் முதல்வருக்கு உண்டு. எங்கள் முதல்வர் இன்றைக்காகவோ நாளைக்காகவோ சிந்திப்பவர் அல்ல. தமிழகத்தின் எதிர்காலத்துக்காக சிந்திக்கும் அக்கறையுள்ள ஒரு தலைவர்.
அண்ணா பல்கலைக்கழக விவாகரத்தில் ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என சட்ட மன்றத்தில் முதல்வர் அதிமுகவினரிடம் கேட்டு அவர்களின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தினார். முதல்வரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடி வந்து விட்டு பத்திரிக்கையாளர்களிடம் வீராவேசமாக பழனிசாமி பேசியிருப்பதை பார்த்து மக்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாநகர் சிறுமி வழக்கில் அதிமுகவை சேர்ந்தவருக்கு இருந்த தொடர்பு சந்திக்கு வந்துள்ளதை மறைக்க பழனிசாமி நடத்திய கபட நாடகம்தான் யார் அந்த சார் எனும் வதந்தி அரசியல் என்பது மக்களுக்கு தெளிவாகிவிட்டது.
தந்தை பெரியாரையே சீமான் கடுமையாக அசிங்கப்படுத்தியிருக்கிறார். அவரை வன்மையாக கண்டிக்காமல் வலிக்காத மாதிரி வார்த்தைகளை விட்டிருக்கிறார் பழனிசாமி. இது அதிமுக இயக்கத்துக்கே அவமானம். தமிழகத்துக்கு மிகப் பெரிய அநீதியான யுஜிசி அறிவிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் போன்ற முக்கிய பிரச்சினைகளை திசை திருப்பதான் பாஜகவின் அடியாளான சீமான் இப்படி பேசி இருக்கிறார் என்று புரிந்தததால்தான் பாம்புக்கும் வலிக்காமல் தடிக்கும் வலிக்காமல் பார்த்துக்கொண்டு கண்டிக்கிறார் பழனிசாமி. இதற்கு பதிலாக அண்ணா திமுக என்னும் பெயரையே அமித் ஷா திமுக என்றோ ஆர்எஸ்எஸ் திமுக என்றோ மாற்றிக் கொள்ளலாம்.
பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டமன்றத்தில் பதில் சொல்ல முடியாதவர் சட்டமன்றத்தில் வாங்கி கட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் வெளியே போய் பொய்களை விதைத்திருக்கிறார். எந்த தகுதியுமே இல்லாமல் குறுக்கு வழியில் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி அந்த முதல்வர் பதவிக்கு சிறுமைதான் சேர்த்தார். தன்மானத்துக்கும் சுய கவுரவத்துக்கும் பெயர் பெற்ற தமிழகத்துக்கே இழுக்காகவும் அவமான சின்னமாகவும் மத்திய அரசுக்கு கும்பிடு போட்டு அடிமையாகி தமிழக மாண்பையே குலைத்தவர் பழனிசாமி,” என்று அவர் கூறியுள்ளார்.