மகா கும்பமேளாவால் உ.பி.யின் பொருளாதாரம் ரூ.2 லட்சம் கோடி உயரும்: இந்திய வர்த்தக சம்மேளனம் தகவல்

புதுடெல்லி: புதுடெல்லி மகா கும்பமேளாவால் உத்தர பிரதேசத்தின் பொருளாதாரம் ரூ.2 லட்சம் கோடி உயரும் என்று இந்திய வர்த்தக சம்மேளனம் கணித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நாளை மகா கும்பமேளா விழா தொடங்குகிறது. இதற்காக முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பல கோடி ரூபாய் செலவு செய்கிறது. உலகளவில் மிகப்பெரிய விழாவாக நடைபெறும் மகா கும்பமேளாவை காண 40 கோடிக்கும் அதிகமானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் உ.பி.யின் பொருளாதாரம் ரூ.2 லட்சம் கோடி உயரும் என்று இந்திய வர்த்தக சம்மேளன (கான்பிடரேஷன் ஆப் ஆல் இந்தியா டிரேடர்) தலைவர் மகேந்திர குமார் கோயில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கடந்த 2013 கும்பமேளாவின்போது உ.பி.யின் பொருளாதாரம் ரூ.12,000 கோடி உயர்ந்தது. இது கடந்த 2019 கும்பமேளாவில் 1.20 லட்சம் கோடியானது. இந்த மகா கும்பமேளாவால் உ.பி.யின் பொருளாதாரம் ரூ.2 லட்சம் கோடியாக உயரும் வாய்ப்புகள் உள்ளன. இவற்றில், பூஜை பொருட்கள் ரூ.2,000 கோடி, மலர்கள் ரூ.800 கோடி, உணவு பொருட்கள் 4,000 கோடி, காய்கறிகள் ரூ.2,000 கோடி என மொத்தம் ரூ.25,000 கோடிக்கு வியாபாரம் இருக்கும்” என்று தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு பெருகும்: மேலும், கடந்த முறை கும்பமேளாவின் போது 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, மகா கும்பமேளாவால் அதற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சம்மேளனம் தெரிவித்துள்ளது. மகா கும்பமேளாவை காண வருவோருக்கு முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவையை உ.பி. அரசு அறிமுகப்படுத்துகிறது. குறைந்தபட்ச கட்டணம் ஒரு நபருக்கு ரூ.3,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் மட்டும் மாநில அரசுக்கு ரூ.150 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகா கும்பமேளாவுக்கு வருபவர்களின் போக்குவரத்து, தங்குமிடம், உணவு உள்ளிட்ட செலவுகளால் உ.பி.யின் பொருளாதாரம் அதிகரிக்கும். அதன் மூலம் ஜிஎஸ்டி வரியும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோடிக்கணக்கில் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.