சென்னை: நீட் தேர்வு விவாகரத்தில் தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றுவதாக தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வு ரத்து தொடர்பாக நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் முதல்வருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே கடும் விவாதம் நடந்தது. அப்போது, நீட் தேர்வை மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என குறிப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியில் நீட் ரத்துக்கான நடவடிக்கை மேற்கொள்வோம் என்றே தெரிவித்ததாகக் கூறினார்.இதை சுட்டிக்காட்டி தவெக தலைவர் விஜய் நேற்று சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.
கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால், தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா, எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை. இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அமைச்சர் பதில்: சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறியதாவது: திமுக இளைஞரணிச் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் கொடுத்துள்ளார். இது மத்திய அரசை எதிர்த்து நடக்கும் போராட்டம். அவர்களை பொருத்தவரை கிராமத்தில் இருக்கும் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
மாநில அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. சட்டமும் நாட்டு நடைமுறையும் புரிந்தால் தான் பேச முடியும். இது சினிமாவில் யாரோ எழுதி கொடுக்கும் வசனத்தை பேசுவதுபோல் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.