''பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் 67% நிறைவுபெற்றுள்ளது'' – அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டு துவக்கிவைக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் நேற்று (11.01.2025)
வரை 67 சதவீதம் நிறைவுபெற்றுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும்
பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும்,
இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும்
தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

2025-ம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்
மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும்
எனவும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும்
எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, கடந்த 09.01.2025 அன்று சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் சின்னமலை வேளச்சேரி பிரதான சாலையில்
இயங்கிவரும் சைதாப்பேட்டை-11 நியாயவிலைக் கடையில் முதல்வர், அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு
வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாயவிலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப
அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில்
நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 50,000 கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு
முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, 11.01.2025 வரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 47 லட்சத்து 07 ஆயிரத்து 584 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை
தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 67 சதவீதம் பணிகள்
நிறைவுபெற்றுள்ளன. மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என
கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.