எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘தளபதி 69’ படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் அப்படம் குறித்த தகவலை விடிவி கணேஷ் மேடையில் பேசிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கராந்தி வஸ்துன்னாம்’ படம் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விடிவி கணேஷ் தளபதி 69 படம் பற்றி மேடையில் பேசியப்போது, அவரைப் பேச விடாமல் இயக்குநர் அனில் ரவிப்புடி தடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பட நிகழ்ச்சியில் பேசிய விடிவி கணேஷ் ” ‘பகவந்த் கேசரி’ படத்தினை விஜய் சார் 5 முறை பார்த்தார். அனில் ரவிப்புடி இயக்குவதற்கு கேட்டார். இவரோ ரீமேக் செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவரை இயக்க 4-5 பெரிய இயக்குநர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால், அவரோ அனில் ரவிப்புடி இயக்கட்டும் என்றார்.” உடனே மைக்கை வாங்கி அவரை பேச விடாமல் தடுத்த இயக்குநர் அனில் ரவிப்புடி, “விடிவி கணேஷ் சாரை ரொம்ப பிடிக்கும். ‘விஜய் 69’ படம் குறித்து எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. அது குறித்து இங்கு பேசுவது சரியாக இருக்காது” என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2023ம் ஆண்டு பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஸ்ரீலீலா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தை அனில் ரவிப்புடி இயக்கி இருந்தார். இந்நிலையில் விடிவி கணேஷின் பேச்சும் அவசர அவசரமாக அவரை தடுத்த அனில் ரவிப்புடியின் நடவடிக்கையும் பகவந்த் கேசரி படத்தைத் தான் எச். வினோத் விஜய்யை வைத்து இயக்குகிறார் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.