மதகஜராஜா விமர்சனம்: ‘சிரிங்க சிரிங்க சந்தோஷமா இருங்க’ – சுந்தர்.சி-யின் கலகல பார்முலா க்ளிக்காகிறதா?

மதகஜராஜா (விஷால்), கல்யாண சுந்தரம் (சந்தானம்), ரமேஷ் (சடகோபன் ரமேஷ்), சண்முகம் (நிதின் சத்யா) ஆகிய நால்வரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். அவர்களது பள்ளிப்பருவக் கால பி.டி வாத்தியாரின் மகளின் திருமணத்தில் மீண்டும் ஒன்றிணைகிறார்கள். அங்கு நடக்கும் திருமண கலாட்டாக்கள் முடிந்தவுடன் நண்பர்கள் சந்தித்துவரும் சிக்கல்கள் குறித்துத் தெரியவருகிறது. அரசியல் செல்வாக்கு மிக்க பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் முதலாளி கற்குவேல் விஸ்வநாத்தால் (சோனு சூட்) ரமேஷுக்கு வேலை பறிபோய் இருப்பதும், சண்முகத்துக்கு நெசவு தொழிலில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருப்பதையும் அறிகிறார் ராஜா. அப்பறம் என்ன, வில்லனை வீழ்த்த சென்னைக்கு வரும் எம்.ஜி.ஆர் செய்யும் அட்டகாசங்களே இந்த `மதகஜராஜா’.

மதகஜராஜா விமர்சனம்

எதிரிகளை அடித்துப் பறக்கவிடும் கட்டுமஸ்தான சிக்ஸ் பேக்ஸ், வில்லனிடம் போடும் தத்துவ பன்ச், நாயகிகளிடம் ரொமான்ஸ் எனத் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ காலத்து துருதுரு நாயகனாக ரசிக்க வைக்கிறார் விஷால். என்ன பேசினாலும் கவுன்ட்டர் போட்டுச் சிரிக்க வைக்கும் சந்தானம், அதிலும் வின்டேஜ் மோடில் காமெடியனாக அவரது பாடி லாங்குவேஜ், மீண்டும் ‘பழைய பன்னீர்செல்வ’த்தைப் பார்த்த ஃபீல். சுந்தர்.சி படத்தின் நாயகிகளாகப் பாடலிலும், நகைச்சுவை காட்சிகளிலும் அஞ்சலியும், வரலட்சுமியும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். அஞ்சலியின் அப்பாவாக வரும் சுவாமிநாதனும் சந்தானத்துடன் சேர்ந்து ஒரு கிச்சு கிச்சு காம்போவை வழங்கியிருக்கிறார். அமைச்சர் நல்லமுத்துவாக வரும் மனோபாலா வருகிற இடங்களில் எல்லாம் தனது முகபாவனைகளாலேயே சிரிப்பு பட்டாசைக் கொளுத்துகிறார். அவரோடு மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், சிட்டி பாபு ஆகியோரையும் திரையில் பார்ப்பது நெகிழ்ச்சி!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசையில் விஷாலின் குரலில் 13 வருடங்களுக்கு முன்பே ஹிட்டடித்த ‘டியர் லவ்வரு’ பாடல், கல்யாண வீடுகளில் ஒரு ரவுண்டு வந்த ‘சிக்கு புக்கு ரயிலு வண்டி’ ஆகிய பாடல்களைத் திரையரங்கில் பார்ப்பது நாஸ்டலாஜியா உணர்வு. அதேபோல ஒரு கமெர்ஷியல் படத்துக்கான உணர்வைத் துள்ளலாகக் கொடுத்திருக்கிறது பின்னணி இசை. ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில் சுமோக்கள் பறக்கும் சேசிங் சண்டைக் காட்சிகள், ரகளையான நகைச்சுவை எபிசோடு, வெளிநாட்டு பீச் பாடல்களில் வரும் சில்ஹவுட் ஆகியவை சிறப்பான கோணங்களால் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒளியுணர்வில் சற்றே திகட்டுகிற வெளிச்சம் ஆங்காங்கே எட்டிப்பார்க்கிறது.

மதகஜராஜா விமர்சனம்

படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் – என்.பி.ஸ்ரீ காந்த் கூட்டணி ஸ்ப்ளிட் ஸ்க்ரீன், மேட்ச் கட் என முடிந்த அளவுக்குப் புதுமையாக வெட்டி ஒட்டியிருக்கிறார்கள். எடுத்துப் பல வருடங்கள் ஆன படம் என்பதை மறைக்க இந்தப் புது புது எடிட்டிங் யுக்திகள், கலர் கிரேடிங்கில் மாற்றங்கள் ஆகியவற்றையும் முயன்றிருக்கிறார்கள். அது சிறப்பாகவே வேலை செய்திருக்கிறது. இருந்தும் இரண்டாம் பாதியின் முற்பகுதியின் நீளத்தைச் சற்றே குறைத்திருக்கலாம். பாடல் காட்சிகளில் போடப்பட்ட செட்கள் கலை இயக்குநர் குருராஜின் சிரத்தையைக் காட்டுகின்றன.

இரண்டாம் பாதி ஆரம்பித்த சில நிமிடங்களில் வரும் ஹீரோ – வில்லன் மோதலில் புதுமையில்லாததால் டல்லடிக்கத் தொடங்க, உடனே மீண்டும் திரைக்கதையில் நகைச்சுவை கூட்டணி இணைந்து ‘சிரிங்க சிரிங்க சந்தோஷமா இருங்க’ என்று கலகலப்பைக் கூட்டுகிறது. டைம் டிராவல் செய்தது போல இருந்தாலும், தன்னுடைய ஜானர் என்றுமே காலாவதியாகாது என்று காலரைத் தூக்குகிறது சுந்தர்.சி-யின் திரைக்கதை. அதிலும் கடைசி 20 நிமிடங்களில் மனோபாலா, சந்தானம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், விஷால் அடிக்கும் லூட்டியில் அரங்கம் சிரிப்பால் பொங்கி வழிகிறது. வில்லனுக்கும் நாயகனுக்கும் நடக்கும் போட்டி, அதன் வசனங்கள், எக்ஸ்ட்ரா லார்ஜ் ஓட்டைகள் போன்றவற்றில் சுடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மதகஜராஜா விமர்சனம்

இந்த விழாக்காலத்தில் லாஜிக்கெல்லாம் பார்க்காமல் நகைச்சுவை ஃபுல் மீல்ஸ் அருந்த நம்மைத் திரையரங்குக்கு அழைக்கிறான் இந்த `மதகஜராஜா’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.