ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பதாக அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். முன்னதாக அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சியை கடந்த 4 ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். அனைத்து துறையிலும் ஊழல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் உள்ளிட்ட யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் என, இருண்ட காலத்துக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.

சட்டமேதை அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியலமைப்பு சட்டத்துக்கு நேர் எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியின் அவலங்களை தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், ‘இது திராவிட மாடல் இல்லை, பேரிடர் மாடல்’ என்று உரக்க சொல்லத் தொடங்கிவிட்டனர்.

ஈரோடு கிழக்கில் நடக்க இருப்பது இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல். கடந்த 2023 இடைத்தேர்தலின்போது, மக்களை பட்டியில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதை பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் திமுக, தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறி செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம்.

வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல், திமுகவை முழுமையாக அகற்ற இருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளை போல பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்க தேசிய ஜனநாயக கூட்டணி விரும்பவில்லை.

மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்து ஆலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை அகற்றி, தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்குவதே எங்கள் இலக்கு” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ காலமானதை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு பிப்ரவரி 5-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதியும் நடைபெற உள்ளது. திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக அறிவித்துள்ளன. பொங்கல் நாளில் வேட்பாளரை அறிவிப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜகவும் அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.