மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகாவிகாஷ் அகாடி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இத்தோல்வியால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. இத்தோல்வியால் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சரத் பவார் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேரும் மனநிலையில் இருக்கின்றனர். இது தவிர சரத் பவாரிடம் இருக்கும் 10 எம்.எல்.ஏ.க்களும் அஜித் பவார் அணிக்கு தாவ பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மற்றொருபுறம் சரத் பவார் அணியை அப்படியே அஜித் பவார் அணியில் சேர்க்க இரு குடும்பத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனவே சரத் பவாரும் விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று உத்தவ் தாக்கரே கட்சியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சிக்குள் எழுந்துள்ளது.
சமீபத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி மாநகராட்சி தேர்தல் குறித்து உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்திய போது கட்சி நிர்வாகிகள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். இதையடுத்து மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து உத்தவ் தாக்கரே தீவிரமாக பரிசீலித்து வருகிறார். இது தொடர்பாக ஏற்கெனவே அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் சூசகமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இது குறித்து பேசிய அக்கட்சியின் எம்.பி சஞ்சய் ராவுத், ”வரும் மாநகராட்சி தேர்தலில் மும்பையிலிருந்து நாக்பூர் வரையிலான அனைத்து மாநகராட்சியிலும் தனித்து போட்டியிடுவோம். என்ன நடந்தாலும் பரவாயில்லை. எங்களது செல்வாக்கை நிரூபித்துக்காட்டுவோம்.
இதற்கு உத்தவ் தாக்கரே ஒப்புதல் கொடுத்துள்ளார். மும்பை, புனே, தானே, நாக்பூரில் தனித்து போட்டியிடுவோம். தனித்து போட்டியிடுவது என்ற முடிவு மற்ற உள்ளாட்சி தேர்தலிலும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் கட்சி தொண்டர்கள் அதிக அளவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் தொண்டர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தோல்வியை சந்திக்க நேரிட்டது” என்றார்.
உத்தவ் தாக்கரேயின் இம்முடிவால் மகாவிகாஷ் அகாடியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இது குறித்து சரத் பவார் மகள் சுப்ரியா சுலே கூறுகையில்,” உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடவேண்டும். கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டோம். உள்ளாட்சி தேர்தலில்தான் தொண்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியும்” என்றார். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வடேதிவார் கூறுகையில், ”சஞ்சய் ராவுத்தின் கருத்து அவரது சொந்த கருத்தாகும்.
ஆனாலும் இது குறித்து உத்தவ் தாக்கரேயிடம் விளக்கம் கேட்கப்படும். அதோடு கூட்டணி அமைத்து போட்டியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்வோம். எங்களுக்கு தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) இயற்கையான கூட்டணி கட்சியாக இருக்கிறது.” என்றார்.
ஏற்கெனவே டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு கொடுக்கப்போவதாக சிவசேனா(உத்தவ்) தெரிவித்துள்ளது. மும்பை மாநகராட்சியை சிவசேனா கடந்த 25 ஆண்டுகளாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தற்போது சிவசேனா உடைந்துவிட்ட நிலையில் வரும் மாநகராட்சி தேர்தல் உத்தவ் தாக்கரேயிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் மகாவிகாஷ் அகாடியில் உள்ள கட்சிகள் தனித்து போட்டும் பட்சத்தில் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். ஏற்கனவே டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடுகிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியில் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.