புதுடெல்லி: “பாஜக ஆட்சிக்கு வந்தால், டெல்லியில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளையும் அக்கட்சி அழித்துவிடும்” என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் எச்சரித்துள்ளார்.
வடக்கு டெல்லியில் உள்ள ஷகூர் பஸ்தியில் உள்ள குடிசைப் பகுதியில் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், “பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் முடிவடைந்த உடனடியாக இந்தக் குடிசைகள் அழிக்கப்படும். அவர்கள் இரண்டு நாட்கள் கூட காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் டெல்லியில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளையும் அழிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஐந்து ஆண்டுகளை மறந்துவிடுங்கள், ஒரு வருடத்திலேயே அவர்கள் அனைத்து குடிசைகளையும் இடித்துவிடுவர். டெல்லி குடிசைவாசிகள் பாஜகவுக்கு வாக்களித்தால் அது அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம். அனைத்து குடிசைகளையும் தனியார் வசம் ஒப்படைக்க ஏற்கெனவே பாஜகவினர் திட்டமிட்டுவிட்டனர்.
முதலில் பாஜகவினர் உங்களின் வாக்குகளைக் கேட்பார்கள். தேர்தலுக்கு பிறகு உங்களின் நிலங்களைக் கேட்பார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த 10 ஆண்டுகளில் குடிசைவாசிகள் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்று, 24 மணி நேரத்தில் அவர்களை, அவர்களின் இடங்களில் குடியமர்த்தினால் நான் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்கிறேன். தவறும்பட்சத்தில் தேர்தலில் போட்டியிட்டு குடிசைவாசிகளைப் பாதுகாப்பேன். பாஜக எவ்வாறு உங்களின் குடிசைகளை இடிக்கிறது என்று பார்க்கலாம்.
கடந்த 5 ஆண்டுகளில் குடிசைவாசிகளுக்காக அவர்கள் வெறும் 4,700 வீடுகள் தான் கட்டியுள்ளனர். குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக்கொடுக்காமல், அவர்கள் தற்போது இருக்கும் இடங்களைக் கையகப்படுத்த பாகஜ திட்டமிட்டுள்ளது” என்று கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
ஷகுர் பஸ்தி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அக்கட்யின் மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயின் போட்டியிடுகிறார். கடந்த 2013, 2015 மற்றும் 2020 ஆண்டுகளின் வெற்றியைத் தொடர்ந்து நான்காவது முறையாக அங்கு போட்டியிடுகிறார்.
டெல்லியின் 70 பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்குகள் பிப்.8ம் தேதி எண்ணப்படுகின்றன. கடந்த 2020 பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 62-ல் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. தற்போது மூன்றாவது முறையாக டெல்லியில் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.