ராமேசுவரம்: தன் பணியில் தலையீடு இருப்பதாக கூறி ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் சரவணன், உள்துறைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது தமிழக காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ள காவல் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ஆர்.சரவணன். இவர் தமிழக உள்துறைச் செயலருக்கு அனுப்பி உள்ள ராஜினாமா கடிதத்தின் விவரம்: ‘கடந்த 18.01.2008-ல் சார்பு ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டு 2020-ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அடைந்து காவல் துறையில் கடந்த 16 வருடங்களாக நன்முறையில் பணிபுரிந்து வருகிறேன். திருவாடானை உட்கோட்ட முகாம் அலுவலக எழுத்தர் தொடர்ந்து என்னிடம் கேட்காமல் ஆர்.எஸ்.காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தன்னிச்சையாக தொடர்ந்து அலுவல்களை நியமித்து எனது நிர்வாகத்தில் தலையிட்டு நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தி வருகின்றார்.
ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலைய சரகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காவல் ஆய்வாளரான எனது டிரைவரை வேறு பணிக்கு வருமாறு ஆயுதப்படையில் இருந்து தன்னிச்சையாக எனது கவனத்துக்கு தெரிவிக்காமல் நேரடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் ஒப்பளிக்கப்பட்ட காவலர்களில் 10 பேர் தமது அனுமதி இல்லாமல் அயல்பணியாக பணிபுரிந்து வருகின்றனர். இக்காவல் நிலையத்தில் 328 புலன்விசாரணை வழக்குகள், 162 குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் 247 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
புலன் விசாரணை நிலையில் உள்ள வழக்குகள் 328 இருக்கின்ற நிலையில் குற்றப்பதிவு பணியக தரவுகளை சேமிக்கும் பணிக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலையில் ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மிகுந்த சக்கரை வியாதியால் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் அவரால் சரிவர பணி செய்யமுடிவதில்லை. இதனால் வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய முடியாமல் வழக்குகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கிறது.
என்னுடைய நிர்வாகத்தில் தலையிட்டு நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்துவதால் எனது காவல் ஆய்வாளர் பணியை திறம்பட செய்யமுடியவில்லை. இதனால் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் தொடர்ந்து காவல் ஆய்வாளராக பணிபுரிய விருப்பமில்லை என்பதையும் மேலும் சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் தொடர்ந்து பணிபுரிய விருப்பமில்லை என்ற விவரத்தை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.