திப்ரூகர்: சீனாவில் எச்எம்பிவி தொற்று பரவி வருகிறுது. இந்த வைரஸ் இப்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை 14 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்தக் குழந்தையை திப்ருகார் நகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் துருவஜோதி புயான் நேற்று கூறும்போது, “காய்ச்சல், சளி காரணமாக 10 மாத குழந்தையை 4 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்தக் குழந்தையின் சளி, ரத்த மாதிரி பரிசோதனைக்காக இந்திய மருத்துவ கவுன்சிலின் மண்டல ஆய்வகத்துக்கு (ஐசிஎம்ஆர்) அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சோதனையில் எச்எம்பிவி தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. இந்த வைரஸ் வழக்கமானதுதான். இதுபற்றி அச்சப்படத் தேவையில்லை” என்றார்.
இதுகுறித்து, திப்ருகாரில் உள்ள ஐசிஎம்ஆர் மண்டல மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் (வடகிழக்கு) மூத்த விஞ்ஞானி டாக்டர் பிஸ்வஜித் கூறும்போது, “திப்ருகார் மாவட்டத்தில் கடந்த 2014 முதல் இதுவரை 110 பேருக்கு எச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த சீசனில் முதல் முறையாக 10 மாத குழந்தைக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் குளிர்காலத்தில் இந்த தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இது புதிது அல்ல. இது தானாகவே சரியாகிவிடும்” என்றார்.