ஜம்மு காஷ்மீரின் சோன்மார்க் சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை சோன்மார்க் மலைப்பாதை இணைக்கிறது. வளைந்து, நெளிந்து செல்லும் இந்த மலைப் பாதையில் காஷ்மீரில் இருந்து லடாக் செல்ல பல மணி நேரமாகும். அதோடு பனிக்காலத்தில் பனிப்பொழிவு, மழைக்காலத்தில் நிலச்சரிவு காரணமாக சோன்மார்க் மலைப் பாதை மூடப்படும்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண காஷ்மீரின் சோன்மார்க் பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியது. மலையைக் குடைந்து சுமார் 12 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுரங்கப் பாதையை காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று முன்தினம் பார்வையிட்டார். சுரங்கப்பாதை மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளின் வீடியோ, புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
அதோடு முதல்வர் உமர் வெளியிட்ட பதிவில், “பிரதமர் மோடி திங்கள்கிழமை சுரங்கப்பாதையை திறந்து வைக்கிறார். புதிய சுரங்கப்பாதை மூலம் சோன்மார்க் பகுதி, பனிச்சறுக்கு சுற்றுலா மையமாக மாறும். குளிர்காலம், மழைக்காலத்தில் எவ்வித சிரமமும் இன்றி லடாக் பகுதிக்கு செல்ல முடியும்” என்று தெரிவித்தார்.
இதற்கு பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் அளித்த பதிவில், “சோன்மார்க் சுரங்கப்பாதையை திறந்துவைக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன். புதிய சுரங்கப்பாதையின் நன்மைகளை நீங்கள் (உமர் அப்துல்லா) மிகச் சரியாக குறிப்பிட்டு உள்ளீர்கள். உங்களது படங்கள், வீடியோக்கள் அருமையாக உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “பிரதமர் நரேந்திர மோடி ஜென்டில்மேன். அவர் அளித்த வாக்குறுதியை காப்பாற்றுவார்” என்று உமர் சமூக வலைதளத்தில் புகழாரமும் சூட்டினார். இந்த சூழலில் பிரதமர் மோடியும் முதல்வர் உமரும் சமூக வலைதளம் மூலமாக நட்புறவை மேலும் வலுப்படுத்தி உள்ளனர்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ஜனவரி 13-ம் தேதி காலையில் சோன்மார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.