புதுடெல்லி: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில் ரஷ்ய தரப்பு ராணுவத்துக்காக யுத்தக் களத்தில் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த பினில் என்ற நபர் உயிரிழந்துள்ளார். அவர் ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்கஞ்சேரியை சேர்ந்தவர் பினில். 32 வயதான அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்குதலில் காயமடைந்த நிலையில் உயிரிழந்தார். அவரோடு மற்றொரு இந்தியரான ஜெயின் என்பவரும் காயமடைந்துள்ளார். இது குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பினில் உயிரிழந்த தகவலை அவரது மனைவி ஜாய்சிக்கு மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தொடர்பு கொண்டு வாய்மொழியாக தெரிவித்துள்ளது. தங்களுக்கு இந்த தகவலை ரஷ்ய ராணுவம் தெரிவித்ததாக அப்போது கூறியுள்ளது.
பல்வேறு முறை யுத்தக் களத்தில் இருந்து இந்தியா திரும்ப அவர் முயற்சித்துள்ளார். அதற்காக மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை அணுக முயன்று தோல்வி கண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ராணுவ தரப்பு விடுவிக்கும் வரை அவர் பணியில் இருக்க வேண்டிய சூழல் இருந்துள்ளது. யுத்தத்தில் முன்களத்தில் பணியில் இருப்பதால் உடல் அளவிலும், மனதளவிலும் சோர்ந்து போயுள்ளதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. பினில், ஓராண்டு கால ஒப்பந்தத்தில் பணியில் இருந்துள்ளார். கடந்த 2024 மார்ச் மாதம் ரஷ்ய ராணுவத்துக்காக யுத்தத்தில் இருந்த ஹைதராபாத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார்.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கியது. இதில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள், உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையில் அங்கம் வகித்து வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய தரப்பில் இந்தியர்கள் நூற்றுக்கணக்கானோர் எல்லையில் போரிட்டு வருவதாக தகவல் வெளியானது. அவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
ராணுவத்துக்கு உதவியாளர் என சொல்லி அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் மோசடியும் நடந்துள்ளது. ரஷ்யாவில் சிக்கிய சிலரை இந்தியா விடுவித்து தாயகம் அழைத்து வந்தது. இருப்பினும் அங்கு இந்தியர்கள் சிலர் இன்னும் பணியில் இருப்பதாக தகவல். அந்த நாட்டு ராணுவத்தில் இந்தியர்கள் பணியாற்றும் தகவல் கடந்த ஆண்டு தெரியவந்தது.