புதுடெல்லி: இடஒதுக்கீடு விவகாரத்தில் டெல்லி ஜாட் சமூகத்தினருக்கு பாஜக துரோகம் இழைப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவர்கள் எப்போது மத்திய அரசின் ஓபிசி (OBC) பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என கேள்வி எழுப்பினார்.
ஜாட் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் குழு கேஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், “டெல்லியில் கணிசமான வாக்குகளை ஜாட் சமூகம் கொண்டுள்ளது. இந்த சமூகத்தினர் டெல்லியின் ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ராஜஸ்தானைச் சேர்ந்த ஜாட் சமூகத்தினர் டெல்லி பல்கலைக்கழகம், அதன் கல்லூரிகளில் சேர்க்கை பெறலாம், எய்ம்ஸ், சப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் அனைத்து மத்திய அரசு நிறுவனங்களிலும் வேலைகள் பெறலாம். ஆனால், டெல்லி ஜாட் சமூகத்தினர் அவ்வாறு பெற முடியாத சூழல் உள்ளது.
நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்களான பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் டெல்லியில் உள்ள ஜாட் சமூகத்தினருக்கு மத்திய அளவில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை” என்றார். பின்னர் தனது எக்ஸ் தளப் பதிவில், “என்னை சந்தித்த ஜாட் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களின் பிரதிநிதிகள் கடந்த 10 ஆண்டுகளாக இடஒதுக்கீடு பிரச்சினையில் பாஜக செய்த துரோகம் குறித்து தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். ஜாட் சமூகத்தினரின் நியாயமான கோரிக்கையை ஆம் ஆத்மி ஆதரிக்கிறது” எனப் பதிவிட்டிருந்தார்.